சும்ப, நிசும்பர்களை சம்ஹாரம் செய்ததினால் அன்னை பார்வதி பிரம்மஹத்தி தோஷம் கொண்டாள். அந்த தோஷத்திலிருந்து விடுபட இங்கு தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இரும்பை கிராமத்தில், முன்பொரு சமயம், மழை பெய்யாது பஞ்சம் தலைவிரித்தாடியது. இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன், மாகாளேஸ்வரரிடம் முறையிட ஆலயத்திற்கு வந்தான். எதிரே இருந்த குளக்கரையில், அரச மரத்தின் கீழ் அமர்ந்து, சித்தர் ஒருவர் கடுந்தவம் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டான்.
அவரது தவம் கலைந்தால் மழை பொழியலாம் எனக் கருதிய மன்னன், நர்த்தகி ஒருவளின் உதவியுடன் அவரது தவத்தை கலைத்து, தவத்தை கலைத்த காரணத்தையும் கூறுகிறான்.
நாடு செழிக்க வேண்டி, சித்தரும் மன்னனும் பெரிய விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். திருவிழாவின்போது வீதிகளில் நடனமாடிக் கொண்டு சென்ற நர்த்தகியின் கால் சிலம்பு கழன்று விழுந்தது. நாட்டியத்தை சிவ தாண்டவமாக கருதிய சித்தர், நாட்டியம் நிற்காது தொடர வேண்டி, கழன்ற சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவிக்கின்றார்.
இதை ஒப்புக் கொள்ளாத சிலர் அவதூறு பேசி அவரை அவமதித்து விட்டனர். இதனால் கோபம் கொண்ட சித்தர், மாகாளர் சந்நிதிக்கு விரைந்தோடி சென்று, "கல்லும் பிளந்து கடுவெளியாகட்டும்" என்று சாபமிட்டார்.
உடனே சிவலிங்கம் வெடித்து மூன்று துண்டுகளாக சிதறின. எல்லோரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதின் பேரில், வெடித்து சிதறிய துண்டுகளில் இரண்டை, செப்புத்தகடு கொண்டு மறிதளம் செய்தார் சித்தர். இவ்வாலயத்து மூலவராக வழிபடப்படும் மூலவர் திருமேனியில், வெடித்ததினால் ஏற்பட்ட வடுவைக் காணலாம்.
மூன்றாவது துண்டு விழுந்த இடம் புல்-பூண்டற்ற கழுவேலி எனும் இடமாக உள்ளது.
தேவாரத்திருத்தலம்.