தங்களைத் துன்புறுத்தும் அசுரர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி, தேவர்கள் தேனீக்களின் வடிவம் கொண்டு இத்தலத்தில் தங்கி, இவ்விறைவனை வழிபட்டு வந்தனர். சுவாமியின் அருளால் துன்பம் நீங்கப் பெற்றனர். தேனீக்கள் பூஜித்தமையால் இறைவனுக்கு மதுவனேஸ்வரர் என்ற பெயரும், இறைவிக்கு மதுவன நாயகி என்ற பெயரும் வந்தன.
சூரியன் இவ்விறைவனை வழிபட்டு தனது மங்கிய ஒளியை நீக்கிப் பிரகாசமடைந்தான். தெற்கில் யமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. அகஸ்தியரும், பிரம்மனும் வழிபட்டுள்ளனர்.
தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் நடந்த போட்டியில், மகாமேருவின் ஒரு சிகரத்தை வாயு பகவான் பெயர்த்தெடுத்துச் செல்லும்போது ஒரு துளி பூமியில் விழுந்தது. அந்த இடமே நன்னிலம் என்பர். தேவாரத்தில் "நன்னிலத்துப் பெருங்கோவில்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவாரத் திருத்தலம்.