கல்வெட்டுக்களில் இவ்வூரை பாச்சில் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆச்சிராமம் என்பது ஆலயத்தின் பெயர். இரண்டும் சேர்ந்து திருப்பாச்சிலாச்சிரமம் என்றானது. தற்போது திருவாசி என்கின்றனர்.
இத்தலத்திற்கு வந்த சுந்தரர் பொன் வேண்டி நின்றார். இறைவன் வாளாதிருந்து விட்டார். இவரை நம்பி வந்தேனே, பித்தனைப் போல மௌனமாயிருக்கின்றாரே, இவரை விட்டால் என்னை ஆதரிக்க வேறு ஆள் இல்லை என்ற நினைப்போ? என்றெல்லாம் ஏளனமாகப் பாடினார். 8வது பாடலின்போது, கொஞ்சம் பொற்காசுகளைத் தந்தார் இறைவன். அவை மாற்றுக் குறைவாக இருந்தன. 9 மற்றும் 10 வது பாடல்களில் தனது பிழைகளை பொறுத்து மன்னிக்குமாறு பாடினார். பிரத்யட்சமான இறைவன், பொற்காசுகளை மாற்றுரைத்து காண்பித்தார். இதனால் மாற்றறிவரதர் எனும் திருநாமம் கொண்டார்.
முன்நாளில் இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லி மழவன் என்பவனின் மகளுக்கு முயலகன் என்ற நோய் வந்தது. மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி (அ) காக்கை வலிப்பு வந்தால் முயலக வியாதி என்று கூறுவர். இதை கேள்விப்பட்ட ஞானசம்பந்தர் அப்பெண்ணை கோவிலுக்கு வரவழைத்து இறைவன் முன் நிறுத்தி, 'துணிவளர் திங்கள்' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி, 'மங்கையை வாடச் செய்யலாமா?' என்று இறைவனிடம் கேட்டு, இறைவனருளால் அவளை குணப்படுத்தினார்.
ஞானசம்பந்தர் பதிகம் பாடி, முயலகன் நோயைக் குணப்படுத்தியதை நினைவு கூறவே, இத்தலத்து நடராஜர் திருவடியின் கீழ் முயலகன் இல்லாது செய்துவிட்டான் சிற்பி எனக் கூறப்படுவதுண்டு.
பார்வதி தேவி இத்தலத்தில் அன்னப்பறவை உருவில் இருந்து கொண்டு தவம் செய்து, இவ்விறைவனை வழிபட்டுள்ளார். இங்குள்ள திருக்குளம் அன்னமாம் பொய்கை எனப்படுகிறது.
இவ்வூரைச் சேர்ந்த சிவபக்தனான கமலன் என்னும் வைசியன் புத்ரபாக்யம் வேண்டி நின்றான். இங்கு கிடைத்த பெண் குழந்தைக்கு அமலை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். அவள் பார்வதி தேவியின் அம்சம். அவள் பெரியவளானதும், வணிகனின் மைத்துனன் ரூபத்தில் வந்த சிவபெருமான் அமலையை மணப்பதாகக் கூறி, அமலையை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது நிஜ மைத்துனன் அங்கு வரவே, குழப்பம் கொண்ட வணிகனுக்கு, ரிஷப வாகனத்தில் காட்சியளித்து தனது நிஜ ஸ்வரூபத்தைக் காட்டியருளினார் மாற்றறிவரதர்.
தேவாரத்திருத்தலம்