பார்வதி - பரமேஸ்வரர் திருக்கல்யாணம் காணுவதற்கு அனைத்து தேவர்களும் இமயமலைக்கு சென்றபடியால் வடபுறம் உயர்ந்தும், தென்புறம் தாழ்ந்தும் காணப்படவே, சமன் செய்வதற்காக தென்திசை திரிகூட மலைக்கு அகஸ்தியரை செல்லுமாறு பணித்தார் இறைவன்.
சிவபெருமானின் திருமணக் கோலம் காண ஆசைப்பட்ட அகஸ்தியர் தமக்கு அருளும்படி வேண்டினார். இத்தலத்தில் விஷ்ணுமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் தம்மை சிவலிங்கமாக்கி ஆகம முறையில் பூஜித்தால், திருமணக் கோலம் காணலாம் எனப் பணித்தார் இறைவன்.
வைணவ ஆலயமாக இருந்ததினால், சைவ சின்னங்களுடன் இருந்த அகஸ்தியரை உள்ளே போக விடவில்லை. இலஞ்சிக் குமரனை வழிபட்டு, அவர் காட்டிய வழியில் திருமேனி முழுதும் திருமண் இட்டுக் கொண்டு வைணவக் கோலம் பூண்டு கோவிலுக்குள் சென்ற அகஸ்தியர், ஆத்மார்த்த பூஜையை தனிமையில் செய்யவிருப்பதாக கூறி கதவை சாத்திக் கொண்டு, மூல மூர்த்தியை 'குறுகு குறுகு' எனக் கூறி கையால் அழுத்தி சிவலிங்கமாக்கினார் என ஸ்தல வரலாறு.
சிவலிங்கத்தின் தலை மீது பட்ட ஐந்து விரல்களின் அடையாளங்கள் ஊன்றி இருக்கின்றன. ஆத்தி மரத்தடியில் எழுந்தருளியதால் குறும்பலாநாதர் எனப் பெயர் கொண்டார்.
இதனால் இறைவனுக்கு தலைவலி ஏற்பட்டது. தலைவலியைப் போக்க 48 வகை நறுமண மூலிகைகளால் தைலம் தயாரித்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
இத்தலத்திற்கு வருகை புரிந்த ஞானசம்பந்தப் பெருமான், வழி நெடுக சிவலிங்கங்களாக இருப்பதைக் கண்டு, தமது கால் படலாகாது என, அம்பாசமுத்திரம் பாதை பிரியுமிடத்திலிருந்தே குற்றாலநாதனை பாடிவிட்டு சென்றார் என்பர்.
தேவாரத்திருத்தலம் - பஞ்ச சபைகளுள் ஒன்று (சித்திர சபை) - சக்தி பீடங்களுள் ஒன்று (தரணி பீடம்)