தனக்கு வேதங்களை பயிற்றுவித்த குருவிற்கு குருதட்சிணை தர நினைத்த உதங்க முனிவர், குருவின் கட்டளைப்படி அந்நாட்டு மஹாராணியின் குண்டலங்களை கேட்டு வாங்கி வந்தார். வரும் வழியில் குண்டலங்களை பறித்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டான் ஒருவன்.
அப்போது தலை மீது பானையை சுமந்து கொண்டு ஆடிக் கொண்டே வந்தான் இடையன் ஒருவன். அந்த இடையன் கூறிய யோசனைப்படி அப்போது எதிர்பட்ட குதிரைக்காரன் ஒருவனுடன் சென்று இழந்த குண்டலங்களை மீட்டு வந்தார் உதங்க முனிவர்.
குண்டலங்களை குருவிடம் தந்துவிட்டு நடந்தவைகளை விளக்கினார் முனிவர். பானையுடன் வந்து ஆடி இடையனாக வந்தவன் எம்பெருமானே என்றும், குதிரைக்காரனாக வந்தவன் இந்திரன் என்றும், குருவின் மூலமாக தெரிந்து கொண்டார் உதங்க முனிவர்.
பின்னர் இத்தலத்தில் தவமிருக்கலானார். உதங்க முனிவரின் தவத்தை மெச்சி, அவர் வேண்டியபடி, குடமாடுங்கூத்தர் எனும் திருநாமம் கொண்டு தரையிலிருக்கும் வெண்ணைப்பானை மீது கால் வைத்தபடி, கோபாலக் கண்ணனாக இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார் எம்பெருமான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கோவர்த்தன கிரியை குடையாக எடுத்த கண்ணனே இங்கு சேவை சாதிப்பதாக ஐதீகம்.
விண்ணகரம் என்றால் விஷ்ணு கிரகம். ஹரி மேவிய விஷ்ணு ஸ்தலம் என்பதே அரிமேய விண்ணகரம் என்றானது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று. நாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று. ஐந்து விண்ணகரங்களுள் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - சோம பீடம். மூலவர்: ஸ்ரீ அமிர்தபுரீஸ்வரர்.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன் யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஸ்ரீ வண்புருஷோத்தமம், ஸ்ரீ வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திரு அரிமேய விண்ணகரம் ஆகிய திவ்ய தேசங்களில் மணவாள மாமுனிகள் மங்களாசாஸன உற்சவத்திற்கு எழுந்தருளுகிறார்.