இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு, தவம் மேற்கொண்டார் விடங்கி முனிவர். அவரது தவத்திற்கு பல இடையூறுகளை செய்தான் அரக்கன் ஒருவன். அரக்கனிடமிருந்து தன்னை காப்பாற்ற வேண்டியும் தடங்கலின்றி தவத்தை தொடர்வதற்கு உதவ வேண்டியும் காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சியையும் பிரார்த்தித்தார் முனிவர்.
முனிவருக்கு உதவும்படியும், அரக்கனை சம்ஹாரம் செய்யும்படியும் காலபைரவருக்கு பணித்தார் இறைவன். அரக்கனை வதம் செய்த வடுகநாதர் இத்தலத்திலுள்ள இலந்தை மரத்தடியில் கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு.
தவத்தை முடித்த முனிவர், இங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவரே காசி விஸ்வநாதர். விடங்க முனிவர் பூஜித்த லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் எனும் திருநாமம்.
அரக்கனை வடுகநாதர் கொன்ற இடம் என்பதனையே நாளடைவில் குண்டடம் என அழைக்கலாயினர். அஞ்ஞான வாசத்திலிருந்தபோது இத்தலம் வந்த பஞ்ச பாண்டவர்களை, துரியோதனின் ஆட்கள் கண்டு, இதை துரியோதனிடம் தெரிவிக்க சென்றனராம். கண்ட இடம் என்பதனையே குண்டடம் என்றழைப்பதாக கூறப்படுவதுண்டு.