தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி அருள் செய்ததால், இத்தலம் திருவருள்துறை எனப் பெயர் கொண்டது.
பாற்கடல் கடையும்போது தோன்றிய ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானின் உஷ்ணத்தைத் தணிக்க, ஈஸ்வரி பசும் வெண்ணையினால் கோட்டை கட்டி, அதன் நடுவே அமர்ந்து தவமிருந்தாள். இதனால் திருவெண்ணெய் நல்லூர் எனும் பெயர் இவ்வூருக்குக் கிடைத்தது.
மகிஷனை வதம் செய்ததினால் ஏற்பட்ட கோர உருவத்தையும் தோஷங்களையும் நீக்க, பார்வதி தேவி பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அன்னை பார்வதியின் நந்தவனத்தில், மலர் பறித்துக் கொண்டிருந்த இரு பெண்களைக் கண்டு சித்தம் தடுமாறிய சுந்தரரைக் கண்டித்து, 'பூலோகம் சென்று சலனம் இல்லாத மனதுடன் என்னை வந்தடைவாயாக' எனக் கூறி அனுப்பிவிட்டார் சிவபெருமான்.
திருநாவலூரில், சடையனார்-இசைஞானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சுந்தரர், நம்பியாரூரன் என்ற பெயரில் வளர்ந்து வந்தார். நரசிங்க முனையர் எனும் அவ்வூரின் அரசனால் ஸ்வீகரிக்கப்பட்டு, செல்வந்தனாக வளர்ந்தார். திருமணப் பருவத்தை எட்டியதும், புத்தூரிலுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர்.
அந்தணர்க்குரிய வைதீகத் திருவுடன் விளங்கிய நம்பியாரூரன் மணப்பந்தல் சென்று அமர்ந்தபோது, ஒரு கிழவன் அங்கு வந்து, 'நம்பியாரூரன் எனக்கு அடிமை, எனவே திருமணத்தை நிறுத்துங்கள்' எனக் கூறி, ஆதாரமாக மணமகனது பாட்டன் எழுதித் தந்த ஓலையைக் காண்பித்தார்.
'ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனை அடிமைப்படுத்துவது நியாயமா?' எனக் கேட்டு நம்பியாரூரன், அந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார். 'இவன் கிழித்தது பிரதி ஓலையே, மூல ஓலை எனது ஊரில் இருக்கின்றது' என்று கூறிய கிழவர், சபையினர் அனைவரையும் திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்து வந்தார்.
திருவெண்ணெய் நல்லூர் சபையினரிடம் நியாயம் வழங்குமாறு கேட்டார் பெரியவர். மூல ஓலையைப் படித்த சபையினர், நம்பியாரூரனின் பாட்டன் கையெழுத்துதானா என்று ஆவணங்கள் மூலம் சரிபார்த்து, பெரியவரின் வாதத்தை ஏற்றுத் தீர்ப்பு வழங்கினர்.
கிழவரின் பின்னே செல்லுமாறு கூறிய சபையினரின் தீர்ப்பிற்கு தலை வணங்கி, நம்பியாரூரன் எனப்படும் சுந்தரர் பின்தொடர, வயதான வேதியனாக வந்த பெரியவர், கிருபாபுரீஸ்வரர் ஆலயத்துள் நுழைந்து மூலஸ்தானத்தின் உள் சென்று மறைந்தார்.
பிராது கொடுத்த கிழவர் மறைந்து, ரிஷபாரூடராய் தரிசனம் தந்த தன்னைத் தடுத்தாட்கொண்டவர் இறைவனே எனத் தெரிந்துகொண்ட சுந்தரர் பரவசப்பட்டார். 'பித்தா... பிறைசூடி...' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.
முருகவேள் மயில் மீது நடனம் புரிந்து அருணகிரிநாதருக்குக் காட்டியருளிய ஸ்தலம்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.