கச்சிக் காரோணம், குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம் என சிவஸ்தலங்களில் மூன்று காரோணங்கள் உண்டு.
இந்த மூன்று ஸ்தலங்களிலும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் புண்டரீக முனிவர். இவர் யமுனைக்கரை வாழ் முனிவரான கருத்தமர் என்பவரின் புத்திரர்.
குடந்தையிலே, ராமர் ருத்ர அம்சம் பெற விரும்பியபோது இறைவன் அவரது உடலிலே ஆரோகணித்துக் கொண்டார் என்பதை அறிந்து கொண்ட முனிவர், நாகப்பட்டினம் வந்து இவ்விறைவனை தரிசித்து, பின் தம்மை இறைவனது உருவில் ஆரோகணித்துக் கொள்ள வேண்டி தவமிருந்தார். இவரது தவத்தினால் மகிழ்ந்த இறைவன், அவரது காயத்தை - அதாவது உடலை, தம் மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார். இதனால், இத்தலம் காயாரோகணம் எனப்படுகின்றது.
காயா என்றால் உடல், ரோகணம் என்றால் ஏற்றுக் கொள்ளுதல். புண்டரீக முனிவரின் காயத்தை அதாவது உடலை தமது மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார் சிவபெருமான். இதனால் ஸ்வாமிக்கு காயாரோகணர் என்றும், இவ்வூருக்கு காரோணம் என்றும் பெயர்கள் வந்தன.
இவ்வாலயத்திலுள்ள ராஜதானி மண்டபத்தில் எல்லா மூர்த்திகளும் ஒருசேர காட்சி தருவதால் இவ்வூருக்கு சிவராஜதானி எனப் பெயர் வந்ததாக கூறுவர். தியாகராஜரின் ஆட்சி பீடம் என்பதால் சிவராஜதானி என்பதாக கூறப்படுவதுண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி இவ்வாலயத்து சுந்தர விடங்கரை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக வரலாறு.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் வாழ்ந்த ஸ்தலம். அருகாமையிலுள்ள நம்பியாங்குப்பம் எனும் ஊரைச் சேர்ந்தவர். மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த இவர், வலையில் பிடிபடும் முதல் மீனை சிவபெருமானுக்கு என்று விட்டு விடுவார். ஒரு நாள் முதலில் கிடைத்த மீனே பொன் மீனாக இருந்தது. இருப்பினும் அதை சிவபெருமானுக்காக விட்டு விட்டார்.
இவரது நேர்மையையும், இறைபக்தியையும் மெச்சிய இறைவன் நேரில் பிரத்யட்சமாகி, அருளாசியை வழங்கி, ஆட்கொண்டதாக வரலாறு.
ஆதிபுரம், பார்ப்பதீச்வரம், அகத்தீஸ்வரம், அரவநகரம் என்றெல்லாம் பெயர்களைக் கொண்ட ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம் - சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்று - சக்தி பீடங்களுள் ஒன்று.