ஸ்தல வரலாறு:
வேடன் வடிவில் வந்த சிவபெருமானுடன் போர் புரிந்த அர்ச்சுணன், பின்னர் சிவபெருமான் எனத் தெரிந்ததும், தவமிருந்து பாசுபதம் வேண்டிப் பெற்ற நிகழ்வு நடந்த ஸ்தலம் என்பார்கள்.
கதலிவனமாக இருந்த இப்பகுதியில் ஒரு மரத்தடியில் பசுக்கள் தாமாகவே பால் சொரிவதைக் கண்டு, அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தனர். கடப்பாறை பட்டதும் ரத்தம் பெருக்கெடுத்து வந்தது. லிங்கம் புதைந்திருப்பது தெரிய வந்தது. லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லையாம். லிங்கத்தைச் சுற்றி கோவில் எழுப்பப்பட்டது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஒரு வைஷ்ணவர் தினமும் திருமாலை சேவித்த பின்னரே உணவு உட்கொள்வாராம். ஒரு நாள் இவ்வாலயத்திற்கு வந்தவர் இங்கு திருமால் இல்லையே என வருந்தித் திரும்பிச் செல்ல முயன்றபோது, சிவபெருமான் தாமே திருமாலாகக் காட்சி தருவதாகக் கூறி, அவ்வாறே செய்தார் என ஸ்தல வரலாறு.
இது சைவ-வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.