பிடவூர் நாட்டுத் திங்களூர் என கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பட்டூர் எனும் இவ்வூரில் ஒரு காலத்தில் பெரும் வறட்சி நிலவியதாம். மழை பொய்த்ததால் நீர் நிலைகளும் இல்லாதிருந்தது.
அந்த சமயத்தில் இங்கு கோவில் கொண்டிருந்த காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் இல்லாததால் வருத்தப்பட்டு தவித்துக் கொண்டிருந்தார் வியாக்ரபாத முனிவர். அப்போது தண்ணீருடன் அவ்வழியே சென்ற ஐராவதத்தை (வெள்ளை யானையை) வழிமறித்து, அபிஷேகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரின் அபிஷேகத்திற்காக கொண்டு செல்லும் தண்ணீர், அதை தரமாட்டேன் என்றது ஐராவதம்.
இதனால் கோபம் கொண்ட வியாக்ரபாதர் ஆக்ரோஷமாக தனது புலிக்கால்களால் பூமியை அறைந்து தோண்டினார். அதிலிருந்து பிரவாகமாக வெளிப்பட்டது நீர். புலியைப் போலப் பாய்ந்து உருவாக்கியதாலும், தோற்றத்தில் அசல் புலிக்கால்கள் போன்ற வடிவத்தில் இருப்பதாலும், இதற்கு புலிப்பாய்ச்சி திருக்குளம் என்று பெயர். இந்தக் குளம் கோவிலுக்கு முன்பாக உள்ளது.
வியாக்ரபாதர் உண்டாக்கிய இந்த தீர்த்தத்தில் கங்கையே கலந்திருப்பதாக ஐதீகம்.
புலிப்பாய்ச்சி திருக்குளத்து நீரைக் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் வியாக்ரபாதர். திருவானைக்காவல் சென்ற ஐராவதம், வியாக்ரபாதர் வழிமறித்து தண்ணீர் கேட்ட விபரத்தை அங்குள்ள மூலவர் ஜம்புகேஸ்வரருக்கு விவரித்தது. அவரது அறிவுரையின் பேரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு திருப்பட்டூர் வந்து, வியாக்ரபாதரை அணுகியது. தண்ணீரை வாங்க மறுத்தார் வியாக்ரபாதர்.
கோவிலுக்கு வெளியே நின்றபடி, தான் கொண்டு வந்த தண்ணீரை தும்பிக்கையால் பீய்ச்சி அடித்து காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தது ஐராவதம். இந்த நிகழ்வை கோவில் கோபுரத்தில் சிற்பமாக வடித்துள்ளனர்.