காயாரோஹணம், காரோஹணம் என்றெல்லாம் கூறப்படும் காரோணம் எனப்படுவது தமிழகத்தில் மூன்று இடங்களில் உள்ளது. அவை நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், காஞ்சிக் காரோணம் என்பவை.
மகா சங்கார காலத்தில் ஆன்மாக்களை தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவபெருமான். இந்த நிகழ்வை காயாரோகணம் என்பர்.
காயா என்றால் உடல், ரோகணம் என்றால் ஏற்றுக் கொள்ளுதல். ஸ்ரீ ராமரின் காயத்தை அதாவது உடலை தமது மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார் சிவபெருமான். இதனால் இங்குள்ள ஸ்வாமிக்கு 'காயாரோகணேஸ்வரர்' என்றும் ஊருக்கு 'காரோணம்' என்றும் பெயர் வந்தன.
சீதா தேவியை ராவணன் கவர்ந்து சென்ற பிறகு, அவளை தேடியலைந்த ராம - லக்ஷ்மணர்கள் இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டனர். அரக்கர்களுடன் போர் செய்ய இருப்பதால் தனக்கு ருத்ராம்சத்தை அளிக்குமாறு ஸ்ரீ ராமர் வேண்டினார். சிவபெருமான் ஸ்ரீ ராமரின் காயத்தில் பிரவேசித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மகாமகத்தன்று நவகன்னியர்கள் ஆரவாரமாக வருவதைப் பார்த்த அம்பிகை, இறைவனை ஆரோஹணம் செய்து கொண்டதால் காயாரோகணம் எனப் பெயர் வந்ததாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
நாகநாதஸ்வாமி ஆலயம் தவிர்த்து, மற்றைய சிவாலயங்கள் அனைத்திலும் மகாமக உற்சவத்து முதல் அநுக்ஞை - மிருத்சங்கரணம் (யாகசாலையில் பயன்படுவது) செய்யத் தேவையான புற்றுமண் இந்த ஆலயத்திலிருந்து கொண்டு செல்கின்றனர்.
தேவாரத் திருத்தலம்.