துர்வாச மகரிஷியின் சாபத்தைப் பெற்ற யக்ஷன் ஒருவன், நண்டு வடிவம் கொண்டான். சாப விமோசனம் வேண்டி நின்ற யக்ஷனை, இத்தலத்திற்குச் சென்று இங்கு கோவில் கொண்டுள்ள சிவலிங்கத்தை வழிபட்டு விமோசனம் பெறுமாறு பணித்தார் துர்வாசர். கற்கடகம் என்றால் நண்டு எனப் பொருள். நண்டு பூஜித்த லிங்கம் என்பதால் இறைவனுக்கு கற்கடேஸ்வரர் எனும் திருநாமம்.
இத்தலத்தைச் சூழ்ந்துள்ள பொய்கையில் பூத்த தாமரை மலர்களைக் கொண்டு, இவ்விறைவனை தினமும் வழிபட்டு வந்தான் தேவேந்திரன். 1008 மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். தினமும் ஒரு பூ குறைவது கண்டு, பொய்கையைத் தானே காவல் காக்க முனைந்தான். ஒரு நாள் ஒரு தாமரைப்பூ நீரில் அமிழ்வதும், அதையடுத்து நீர்க்குமிழ்கள் தோன்றுவதும் கண்டான். பின்னர் ஒரு தாமரைப்பூ இறைவனின் திருமுடியில் இருக்கக் கண்டு அதிசயித்தான். இதற்கு யார் காரணம்? எவ்வாறு நிகழ்ந்தது? எனக் குழம்பிக் கொண்டிருந்த இந்திரனிடம், நண்டு ஒன்று தினமும் ஒரு மலரால் தம்மைப் பூஜிப்பதாக அசரீரியாகக் கூறினர் இறைவன்.
திரு நண்டு தேவன்குடி என்பதே திருந்துதேவன்குடி என்றாகி இருக்க வேண்டும். எப்போதும் இத்தலத்து இறைவனையே வழிபட ஆசைப்பட்ட நண்டு, மறு பிறவியில் இவ்வூரில் பிறந்து குறுநில மன்னனாக ஆண்டு வந்தது. இந்த மன்னனுக்குத் தீராத வயிற்று வலி. நாட்டில் பஞ்சம் வேறு தலைவிரித்து ஆடியது. இவற்றிலிருந்து விடுபட இறைவனை வேண்டி நின்றான் மன்னன். அரண்மனை பணியாட்களை மனிதச் சங்கிலியாக நிற்க வைத்து, அடுத்த கிராமத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். நாட்டின் பஞ்சமும் அகன்றது - அவனது வயிற்று வலியும் நீங்கியது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நாளன்று இரவில், காராம்பசுவின் பாலை (21 குடம்) அபிஷேகம் செய்தால், சிவலிங்கத் திருமேனியின் துவாரத்திலுள்ள பொன் நிற நண்டு வெளி வந்து காட்சி தரும் என வசிஷ்ட மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதாக அபிதான சிந்தாமணி தெரிவிக்கிறது.
ஒன்றரை கிலோ நல்லெண்ணையால் சுவாமியையும், இரண்டு அம்பிகைகளையும் அபிஷேகம் செய்து அதை உடலில் பூசிக் கொண்டால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
தேவாரத் திருத்தலம்.