'கரவீரம்' என்பதற்கு 'பொன் அரளி' எனப் பொருள். ஸ்தல விருட்சமே பொன் அரளியாக இருப்பதால் இவ்வூர் கரவீரம் எனப் பெயர் கொண்டது.
சிங்கத்துவஜன் எனும் அரசன் வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது, பரத்வாஜ முனிவர் தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். அரசன் வந்திருப்பது தெரிந்தும் மரியாதை தரவில்லை எனக் கோபித்து எட்டி உதைத்தான்.
"தன்னுடைய தவம் கலையக் காரணமாயிருந்த இவன் கழுதையாகட்டும்" என சபித்து விடுகிறார் முனிவர். செய்த தவற்றிற்கு வருந்தி பிராயச்சித்தம் வேண்டி நின்றான் அரசன். "பொன் அரளி மலர் பூத்திருக்கும் ஸ்தலத்தில் சாப விமோசனம் அடைவாய்" எனக் கூறினார் முனிவர்.
பல ஊர்களுக்கு கழுதையாகச் சென்று சுற்றித் திரிந்த சிங்கத்துவஜன், ருத்ராட்சப் பொதி மூட்டை ஒன்றைச் சுமந்து இத்தலத்திற்கு வர நேரிட்டது. மூட்டையை உதறிவிட்டு, அருகேயிருந்த அனவரத தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் சாபம் நீங்கி பழைய உருவம் கொண்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அன்று உத்திர நட்சத்திர நாள்.
தேவாரத் திருத்தலம்.