அக்ராயர் எனும் மன்னன் வெம்மை நோயால் அவதியுற்றான். ஒரு பெரியவரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து, திருக்குளத்தில் நீராடி, கருணாகரப் பெருமாளை வழிபட்டான் என்றும், அவரது கடாட்சத்தால் மழை பொழிந்து, குளிர்ச்சியடைந்து குணமடைந்ததாகவும் ஸ்தல வரலாறு விளக்குகிறது. பெரியவராக வந்து வழிகாட்டியவர் பெருமாளே என்பதையும் அவன் உணர்ந்துகொண்டதாக ஸ்தல வரலாறு மேலும் விவரிக்கிறது.
உண்மையான பக்தியை மட்டும் பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு கருணை காட்டுவதால் கருணாகரப் பெருமாள் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கார்ஹ மகரிஷி, கருணாகரப் பெருமாளை வேண்டி நீண்ட தவம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு பிரத்யட்சமானதால், இத்தலம் முனிவரின் பெயரால் கார்ஹகம் என்றழைக்கப்பட்டு, பின்னர் காரகம் ஆனதாகக் கூறுவர்.
கார்ஹ முனிவருக்கு ஞானத்தை வழங்கியதால், இந்த பெருமாளை சேவிப்பவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள் என ஐதீகம்.