ஆ - நிலை - அதாவது ஆன்மாக்கள் நிலை பெற்ற ஸ்தலம். ஆ என்றால் பசு - அதாவது காமதேனுப் பசு வழிபட்ட ஸ்தலம் என்பதால் ஆநிலை எனப் பெயர் கொண்டது. காமதேனு பசுவானது இங்குள்ள ஆதிலிங்கத்தை வழிபட்டு படைப்பு தொழிலை மேற்கொண்டு, இவ்வனத்துள் நிலைத்திருந்த கருக்களுக்கு உருக்கள் தந்ததால் கரூர் எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி கரூர் என்றானது. வஞ்சி மரங்கள் மிகுந்திருந்த இடம் என்பதால் வஞ்சி மாநகர் எனப் பெயர் கொண்டது.
சூரியன் வழிபடுவதால் பாஸ்கர க்ஷேத்ரம் எனப்படுகிறது.
நீண்ட தவம் ஒன்றை மேற்கொள்ள விரும்பிய காமதேனுப் பசு, அதற்கு தகுந்த இடத்தை தேடி அலைந்த போது, நாரதரின் வழிகாட்டலால், இங்குள்ள வஞ்சி (அசோக) வனத்தை அடைந்தது. இங்குள்ள புற்று ஒன்றிலிருந்து சுயம்புவாக வெளிப்பட்ட மஹாலிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டது. ஒரு நாள் கால் இடறி தடுக்கி விழுந்ததால், லிங்கத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. சிவ அபராதம் செய்து விட்டோமே என மனம் கலங்கிய காமதேனுவிற்கு ரிஷபாரூடராக காட்சி தந்தருளி அதன் மனக் கவலையைப் போக்கிய இறைவன் என்பதால் பசுபதீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
இதனால் லிங்கத் திருமேனியில் பசுவின் காலடி குளம்பு சுவடுகள் காணப்படுகின்றன.
இங்கு அவதரித்த கரூர் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய ஞானி. அவரது அருமை தெரியாத சிலர் அவரை விரட்டிக் கொண்டு வந்தபோது பயந்தவர் போல் ஓடி வந்து இறைவனுடன் ஜோதி வடிவாக கலந்து விட்டார். இறைவனும் அவரது வலது பாகத்தில் அவரை சேர்த்துக் கொண்டாராம். இதனால் லிங்க பாணம் வடக்குப் புறமாக சாய்ந்துள்ளது.
படைப்பு தொழிலை மேற்கொண்டுள்ளதால் தாமே பிரதானம் என இறுமாப்பு கொண்ட பிரம்மாவின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் அவரை சோதித்தார். பிரம்மாவின் இரவுப் பொழுது முடிந்து பகல் ஆரம்பித்ததும், படைப்புத் தொழிலைத் தொடங்கியதும், எல்லாம் சிதைந்து போயின. தமது கர்வம் இந்நிலையை உருவாக்கியது எனப் புரிந்து கொண்ட பிரம்மா, தவற்றிற்கு வருந்தி, சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டார். பிரம்மா தவம் புரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், படைப்புத் தொழில் நிற்காதிருக்க, லிங்க பூஜை செய்து கொண்டிருந்த காமதேனு பசுவிற்கு படைக்கும் ஆற்றலை வழங்கினார் சிவபெருமான். தவத்தை முடித்து இங்கு வந்த பிரம்மா, காமதேனு படைப்பு தொழிலை மேற்கொண்டுள்ளதை கண்ணுற்று, ஒரு பசுவால் இதை செய்ய முடிகிறதென்றால் தாம் கர்வம் கொண்டது அர்த்தமற்றது என உணர்ந்து கொண்டார். அவருக்கு காட்சி தந்த இறைவன் அவருக்கு ஆசி வழங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொள்ள பணித்தார்.
வெண்ணை மலைக்குப் பக்கத்தில் வேள்விச்சாலை ஒன்றை அமைத்து யாகம் நடத்திய பிரம்மா மீண்டும் படைப்புத் தொழிலை வழங்கிய பசுபதிநாதருக்கு கோவிலை ஸ்தாபித்தார். வஞ்சி வனத்து காவல் தேவதைக்கு கோவிலும் (தற்போது காளிக் கோவில்) அய்யனாருக்கு கோவிலும் நிர்மாணித்தார்.
இங்குள்ள நந்தவனத்தில் பூக்களைப் பறித்து மாலைகளாக்கி பசுபதிநாதருக்கு சாற்றும் கைங்கர்யத்தை செய்து வந்தார் சிவகாமியாண்டார் எனும் சிவபக்தர். அடியார்களுக்கு கைங்கர்யம் செய்து வந்தார் எறிபத்த நாயனார் எனும் பக்தர். இவ்விருவரும் வாழ்ந்த இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார் புகழ்ச் சோழர் இவர் உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிபவர்.
ஒரு நாள் புகழ்ச் சோழனின் பட்டத்து யானை நதிப்புறத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பட்ட சிவகாமியாண்டாரின் பூக்குடலையை பிடுங்கிய யானை மாலைகளை காலடியில் போட்டு மிதித்தது. அங்கு வந்து கொண்டிருந்த எறிபத்த நாயனார் இதைக் கண்டு வெகுண்டு யானையின் தும்பிக்கையை தனது வாளால் வெட்டினார். எதிர்த்த படைவீரர்களையும் கொன்றார்.
யானையைக் கொன்றவரை தண்டிக்க புறப்பட்ட புகழ்ச் சோழன், கொன்றவர் சிவனடியார் என தெரிந்ததும் காரணத்தை விசாரித்தான். யானையின் தவற்றிற்கு நீங்கள் வழங்கிய தண்டனை சரியே ஆனால் அதனை சரியாக கட்டுக்குள் வைக்காத என்னையும் தண்டியுங்கள் எனக் கூறி தனது உடைவாளை உருவி எறிபத்தரிடம் தந்தான் அரசன். இவ்வளவு நல்ல மனம் படைத்த அரசனின் யானையைக் கொன்றமைக்காக மனம் வருந்திய எறிபத்தர், வாளால் தம்மையே வெட்டிக் கொள்ள முற்பட்டார். சுயநலம் இல்லாத இவர்களின் செய்கைகளினால் சந்தோஷப்பட்ட இறைவன் அவர்களது முன்பாக காட்சி தந்து இறந்தவர்களையும் உயிர்ப்பித்து தந்ததாக ஸ்தல வரலாறு.
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சிவபெருமான் சுக்கிரனுக்கு உபதேசித்த ஸ்தலம். திருவிசைப்பா பாடிய கரூர் தேவர் அவதரித்த ஸ்தலம். எறிபத்த நாயனார் பிறந்த ஸ்தலம். புகழ்ச் சோழ நாயனார் ஆண்ட ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்ரம்