கிழக்கு - மேற்காக 15 கி.மீ நீளமும், 1000 அடி உயரமும் கொண்டுள்ளது அழகர் மலை எனப்படும் திருமாலிருஞ்சோலை.
பிரளய காலத்திலும் நிலைத்திருக்க எண்ணிய தர்மதேவதை இங்கு தவம் புரிந்து, திருமாலிடம் வரம் பெற்று மலை வடிவம் பெற்று எம்பெருமானை தாங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
கள்ளர்களுடைய நாட்டில் எழுந்தருளியிருப்பதாலும், அவர்களின் குலதெய்வமாக இருப்பதாலும் கள்ளழகர் என்ற திருநாமத்தைக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.
எம்பெருமானே இங்கு விருப்பம் கொண்டு கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு. இதை விளக்கும் வகையில் தடங்கல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோவில் என திருமங்கை ஆழ்வாரும், புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோவில் என நம்மாழ்வாரும் பாடியுள்ளனர்.
யமதர்மராஜன் பேரழகு வடிவினனாக இருந்ததால் யாரும் அவரைக் கண்டு பயப்படாமல் இருந்தனர். இதனால் சில சமயம் கடமையிலிருந்து தவறவும் நேரிட்டது. சிவபெருமான் ஒரு நாள் யமனை அழைத்து, விஷயத்தை தெளிவுபடுத்தி, அவனது அழகை மறைத்து கோர வடிவம் கிடைக்கச் செய்தார்.
தலையில் கொம்பு, கோரைப் பற்கள், கரிய நிறம் கொண்டு அழகற்றவனாக மாறினான். கோர உருவம் பெற்றதால் வருத்தமுற்ற யமதர்மராஜன், சிவனிடம் தனக்கு பழைய தோற்றத்தை தரும்படி வேண்டினான். பலனில்லை.
திருமாலை பணிந்து பழைய தோற்றத்தைப் பெற வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தான். பிரத்யட்சமான திருமால் விதிக்கப்பட்ட விதி என ஆறுதல் கூறி, கொம்பை மட்டும் மறையச் செய்தார். உயிர்கள் எல்லாம் உன்னுடைய கோர உருவத்தைக் கண்டு பயப்பட உன் வடிவம் பயன்படும். உன்னுடைய கோரைப் பற்கள் உலகில் நோய்களை உண்டாக்கும் என ஆசிர்வதித்தார்.
(ஆடி - புரட்டாசி மாதங்கள் யமனின் கோரைப்பற்களாக இருக்கின்றன).
தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்தான் யமதர்மராஜன். சந்திரனின் குளிர்ச்சியும் ஒளியும் கொண்ட விமானம் ஒன்றை நிர்மாணிக்க செய்தான். நுழைவாயிலின் மேலே யோக நரசிம்மர் சுதை சிற்பமாக இருக்கின்றார்.
இன்றும் யமதர்மராஜன் அழகர் கோவிலுக்கு வந்து அர்த்தஜாம பூஜை செய்வதாக ஐதீகம்.
சித்ரா பௌர்ணமியன்று அழகர் வைகையில் இறங்கி வண்டியூர் வந்து மீண்டும் கோவில் வந்தடையும் வைபவத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். 9 நாட்களுக்கு மதுரையே விழக்கோலம் பூணும். நான்காம் நாள் அழகர் மதுரைக்கு புறப்படுவார். மதுரையே எதிர்கொண்டு வரவேற்கும்.
கொண்டபயனார் மண்டபத்தில் பூஜைகளை முடித்து, பொய்கைகாரன்பட்டி, கள்ளந்திரி, அம்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சநேந்தல் ஆகிய ஊர்களில் பயணிப்பார். வழியில் 400 இடங்களிலாவது மண்டகப்படி நடக்கும்.
மாரியம்மன் கோவில் - கேசபுதூர் வந்தடைவார். பின்னர் வைகை ஆற்றில் இறங்குவார் - 3 நாட்களுக்கு நடைபெறும். எதிர்சேவை சிறப்புற நடைபெறும்.
சர்க்கரை - மாவு - சுக்கு - மிளகு கலந்த கலவையை பாத்திரத்தில் வைத்து தீபமேற்றிக் கொண்டு வரும் பெண்கள் எதிர் சேவையில் நின்று வரவேற்பர். ஐந்தாம் நாள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார். ஆறாம் நாள் காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் வந்து, கருட வாகனத்திற்கு மாறி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரும் நிகழ்ச்சி நடத்திக் காட்டுவார்கள். ஏழாம் நாள் ராஜாங்க சேவை, எட்டாம் நாள் கள்ளர் கோலம் பூண்டு பூப்பல்லக்கில் புறப்பாடு. ஒன்பதாம் நாள் அழகர் கோவிலுக்கு திரும்புவார்.
திருப்பதியில் லட்டு பிரசாதம் விசேஷமாக இருப்பது போல், இங்கு தோசை பிரசாதம் விசேஷம்.
தர்ம தேவதை மற்றும் யமதர்மராஜன் வழிபட்ட ஸ்தலம்.
சித்ரா பௌர்ணமியன்று அழகர் வைகையில் இறங்கி வண்டியூர் வந்து மீண்டும் கோவில் வந்தடையும் வைபவத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். 9 நாட்களுக்கு மதுரையே விழக்கோலம் பூணும். நான்காம் நாள் அழகர் மதுரைக்கு புறப்படுவார். மதுரையே எதிர்கொண்டு வரவேற்கும்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.