பிரம்மாவிடமிருந்து வேதங்களை கோமுகாசூரன் எடுத்துச் சென்று விட்டதால் ஞானத்தை இழந்து துக்கித்த பிரம்மா, மறைகளை திரும்ப பெற வேண்டி தவமிருக்க தகுந்த இடம் தேடி அலைந்து இத்தலத்தை தேர்ந்தெடுத்து தவம் மேற்கொண்டார். விஷ்ணு மூர்த்தியை நோக்கி தவமிருந்தார் பிரம்மா. அசுரனிடமிருந்து மறைகளை மீட்ட திருமால், கருட வாகனம் கொண்டு பிரம்மன் முன்பாக பிரத்யட்சமானார். இதனால் மூலஸ்தானத்தில் தேவியர்கள் இல்லை.
அர்ச்சாரூபமாக காட்சி தந்த இடத்திலேயே பக்தானுக்கிரகம் செய்ய ஊன்றி விட்டார் வைகுந்தநாதன். காலப்போக்கில் அவர் மீது புற்று ஒன்று வளர்ந்தது.
பாண்டிய அரசர்களின் அரண்மனை பசுக்கள் அருகேயுள்ள வனத்தில் தினமும் மேய்வது வழக்கம். அதில் ஒரு பசு மட்டும் அரண்மனை சென்ற பின் பால் கறக்காது. இதன் பின்னணியை கண்காணித்ததில் அந்த பசுவானது, எம்பெருமான் மேல் வளர்ந்துள்ள புற்றின் மீது பால் சொரிவது தெரிய வந்தது. இதைக் கேள்விப்பட்ட அரசன் புற்றை தோண்டச் செய்தான். ஸ்ரீ வைகுண்டநாதரின் விக்ரஹம் கிடைத்தது. அதை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான். இதனால் வைகுந்தநாதருக்கு தினமும் பால் திருமஞ்சனம் செய்கின்றார்கள். ஸ்வாமிக்கு பாற்பாண்டியர் என்ற திருநாமம் வந்தது.
கால தூஷகன் எனும் திருடன், தீமை புரிந்து பொருள் சேர்ப்பவர்களிடம் கொள்ளை அடிப்பான். அதில் பாதியை வைகுந்தநாதனுக்கு கொடுத்து விடுவான். மீதியை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவான். அரண்மனையிலேயே ஒரு நாள் திருடும்போது, காவலாளிகள் அவனது கூட்டாளிகளை பிடித்து விட்டனர். கால தூஷகன் தப்பி சென்று எம்பெருமானை சரணடைந்தான்.
அவனை காப்பாற்றுவதற்காக எம்பெருமான் ஒரு முதியவர் வடிவில் அரண்மனைக்கு சென்று தாமே களவாடியதாக கூறி தம்மை ஒப்புவித்துக் கொண்டார். உமக்கு ஏன் இந்த தீய தொழில்? என வினவினான் அரசன். எம்பெருமான் தனது சுயஸ்வரூபத்தைக் காண்பித்து தருமம் செய்யாதவர்களின் பொருட்களை கள்வர்கள் கவர்வர் எனக் கூறினார். அரசன் தனது தவற்றை திருத்திக் கொள்வதாக கூறி, அவரை வணங்கி நீர் என்றென்றும் கள்ளர்பிரானாக இத்தலத்திலேயே இருக்க வேண்டும் என வேண்டினான். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் கள்ளர்பிரானாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.