ஆதியில் இவ்வூரில் வில்லவன்-வாதாபி என்ற இரண்டு அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். தினம் ஒருவரை விருந்துண்ண அழைத்து, வாதாபி எனும் அரக்கனைக் கொன்று கறி சமைத்துப் போடுவான் வில்லவன். விருந்துண்ண வந்தவர் சாப்பிட்டபின், "வாதாபி" என்று உரக்க கூவி அழைப்பான். உண்டவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவான் வாதாபி. பின்னர் இறந்து போன விருந்தாளியை இருவருமாக உண்பார்கள்.
இந்த அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட எண்ணிய அகஸ்தியர் இவர்களது வீடு தேடிப் போனார். வழக்கப்படி அவரை உபச்சாரம் செய்து அழைத்துப் போய் விருந்திட்டனர். மிச்சம் வைக்காமல் உணவை உண்ட அகஸ்தியர் "வாதாபி ஜீரணோத்பவ" எனக் கூறி வயிற்றைத் தடவினார். அகஸ்தியரின் வயிற்றில் இருந்த வாதாபி ஜீரணமாகி விட்டான்.
வந்திருப்பவர் அகஸ்தியர் எனத் தெரிந்துகொண்ட வில்லவன், ஊரை விட்டே ஓடிவிட்டான் என்ற கதை ஒன்று இருக்கின்றது.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி-பூ தேவி சகிதமாக நீலமேகப் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.