மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ தர்மசம்வர்த்தினி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். அம்பு பட்ட தழும்பு திருமேனியில் காணப்படுகிறது. உயரமான பாணத்துடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்கம். மேற்கு பார்த்த சந்நிதி.
கோஷ்டத்திலுள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி கொள்ளை அழகுடன் தரிசனம் தருகிறார். ஒவ்வொரு தமிழ் மாத வியாழனன்றும் சுவாமியின் சிரசில் மஞ்சள் கயிறுகளைக் கட்டி சிறப்பு ஆராதனைகள் செய்வார்கள். பின்னர் அதை மாணவ மாணவியருக்கு விநியோகிப்பார்கள். இவருக்கு உற்சவ மூர்த்தமும் உண்டு.
நந்தியம் பெருமான் அழகாக இருக்கின்றார். பிரதோஷ நாட்களில் பச்சரிசி மாவு காப்பிட்டு, நாணயங்களை பதித்து அலங்கரித்திருப்பது பார்க்க ரம்யமாக இருக்கும்.
பரசு, மோதகம், ருத்ராட்சம் ஆகியன ஏந்திய கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ சகடவிநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. ஒரே கல்லால் உருவாக்கப்பட்டவர்.
சுவாமியின் வலப்பக்கத்தில் அம்பாள் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி கிழக்கு பார்த்து எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இவளை ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி என்று தமிழில் அழைக்கின்றனர்.
கல்யாண முருகனாக ஸ்ரீ ஆறுமுகன் வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடனிருக்க காட்சி தருகிறார்.
காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், காளத்தீஸ்வரர், சிவசூரியன், பர்வதவர்த்தினி சகித ராமநாதர், கையில் வீணையுடன் பாலசரஸ்வதி, காலபைரவர், சனீஸ்வரர் மற்றும் நாகர்களை தரிசிக்கலாம்.