உரோமச முனிவர் தமது குருவான அகத்திய பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார். அதற்கு அகத்தியர், "நீ பொருநை ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு" என்றார். (சங்கு முகம் என்பது பொருநை ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்).
அகத்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூ கரை ஒதுங்கிய இடங்களில் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். மிதந்து வந்த மலர்களுள் எட்டாவது மலர் கரை ஒதுங்கிய இடமே ராஜபதி.
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம்.
இக்கோவில் முற்றிலுமாக பொருநை ஆற்றின் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு அழிந்தது (1648 ஆம் வருஷம்) என்றும், கோவில்பட்டியை சேர்ந்த சைவ சமயத்தினரும் சிவ பக்தர்களுமாக சேர்ந்து சிவ ஆகம முறைப்படி இக்கோவிலைப் புதுப்பித்ததாக குறிப்பொன்று கூறுகிறது.