வாழப்பந்தலில் தவமிருந்து சிவபூஜை செய்து கொண்டிருந்த தாய்க்காக, தீர்த்தம் ஒன்றை உண்டாக்கும் யோசனையில் இருந்த முருகன், தனது வேலாயுதத்தை வீசி விட அது குன்றைப் பிளந்து கொண்டு சென்று, நீரை வரவழைத்தது - கூடவே ரத்தமும் வந்தது. குன்றின் மீதமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த ஏழு ரிஷிகளின் உடலில் வேல் ஊடுருவி சென்றதால் குருதி வெளிப்பட்டது.
முனிவர்கள் மோட்சத்திற்கு சென்றாலும், அவர்களை கொன்ற தோஷம் முருகனை பற்றியது. அதிலிருந்து விடுபட, அன்னையின் யோசனைப்படி, செய்யாற்றின் வடகரையில் ஏழு கயிலாயங்கள் மற்றும் தென்கரையில் ஏழு கயிலாயங்கள் அமைத்து, அதில் கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷத்திலிருந்து விடுபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள சப்த கரை கண்டேஸ்வரர்களையும் வழிபட்ட முருகன் அருகிலேயே ஒரு சிறு குன்றின் மீது கோவில் கொண்டார். இதுவே வில்வாரணி நட்சத்திர கோவில். இங்கு முருகப் பெருமான் சிவசுப்ரமண்ய சுவாமியாக எழுந்தருளியுள்ளார்.
சிவபெருமானை வெறுக்கும் வகையில் தனது மகள்களை வளர்த்து வந்தான் தட்சன். அந்த பெண்களுக்கு சிவதீட்சை செய்து வைத்தார் நாரதர். இதனால் தட்சனின் சாபம் கொண்ட நாரதர், சாப நிவர்த்திக்காக இங்கு தவமியற்றி, இவ்விறைவனை வழிபட்டு, சாப நிவர்த்தி பெற்றார். இதனால் இவ்வூர் நாரதர் பூண்டி என அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தாம்பூண்டி என்றானது.
ஸ்தல விருட்சமான இலந்தை மரத்தடியில் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும், இறைவனை வழிபடும் நாரதரின் திருவுருவமும் காணலாம்.