ஈஸ்வர பட்டம் பெற விரும்பிய சனி பகவான், சிவபெருமானை தரிசிக்க காத்திருந்தார். பிருங்கி முனிவர் கூறிய யோசனைப்படி திருவண்ணாமலை வந்து உமையன்னையின் அருள் வேண்டி தவமிருந்து அன்னையின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.
பின்னர் சோழபுரம் வந்த சனி பகவான் அமாவாசையும் கரிநாளும் கூடிய ஒரு தினத்தில், கருப்பு சாந்து திலகமணிந்து, சிவபூஜை செய்யும் கோலத்தில் சிவபூரணியை தரிசித்தார்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணை ஒட்டி இருக்கும் சாந்தை எடுத்து ஒரு சிறு லிங்கமாக உருவாக்கி சனி பகவானிடம் தந்தாள் உமையன்னை. இந்த லிங்கத்தை பூஜிக்கமாறு பணித்தாள் உமையன்னை. அதுவே த்ரியம்பக நேத்ர லிங்கம். இந்த லிங்கத்தை முறைப்படி பூஜித்து ஈஸ்வர பட்டம் பெற்ற சனி பகவான் சனீஸ்வரர் ஆனார். தமக்கு ஈஸ்வர பட்டம் கிடைக்க வழி காட்டிய அன்னையின் சந்நிதி வாசலிலேயே இருக்க அனுமதி பெற்று, அதன்படி அங்கேயே இருப்பதாக ஸ்தல வரலாறு.
வெள்ளிக்கிழமைகளிலும், பூரம், அவிட்டம், அனுஷம், சுவாதி நட்சத்திர தினங்களிலும் சிவபூரணிக்கு அபிஷேகம் செய்வது உகந்தது. அமாவாசை (அ) கரி நாட்கள், மற்றைய தினங்களின் சனி ஹோரையில் சனீஸ்வரருக்கும், த்ரியம்பக நேத்ர லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்வது சிறந்தது என்பர்.