கைலாசத்தில் ஏகாந்தமாக அமர்ந்து உமையன்னைக்கு சிவரகசியத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். கிளி வடிவில் இருந்த ஒரு முனிவர், ஒளிந்திருந்து இந்த உபதேசத்தை கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் பூலோகத்தில் கிளியாக பிறந்து அல்லல் படும் சாபத்தைப் பெற்றார்.
வியாசருக்கு மகனாக கிளி முகத்துடன் பிறந்து, சுகர் என்ற பெயருடன் வளர்ந்து, இவ்வாலயத்து மருத மரத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டார். கடுந்தவமிருந்து பிரம்மத்தை உணர்ந்து, சுகபிரம்ம மகரிஷி ஆனார்.
ஜோதிடக் கலையை அறிந்தார். சுகபிரம்ம மகரிஷியின் சிலை வடிவம் மருத மரத்தடியில் உள்ளது.
சப்தகன்னியர்கள் இவ்விறைவனை வழிபட்டு, தங்களது தோஷம் நீங்கப் பெற்றனர். உரோம மகரிஷி, ப்ருகு முனிவர், அகஸ்தியர் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம் இது. அகஸ்தியர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டுள்ளார்.
பெண்ணையாற்றுக்கும் மலட்டாற்றுக்கும் இடையே இருப்பதால் இவ்வூரை இடையாறு என்கின்றனர்.