ஸ்ரீ கண்டன க்ஷேத்ரப் புராண வரலாற்றின்படி, ஸ்ரீ லட்சுமி தேவியின் வேண்டுகோளின் பேரில், பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்ததாகக் கூறப்பட்டுள்ளது. திருக்கண்டியூர் ஸ்தல புராணமோ, பார்வதி தேவிக்காக நிகழ்ந்ததாகக் கூறுகிறது.
தலையை இழந்த பிரம்மா கோபம் கொண்டு, "எனது மண்டை ஓடு உன் கையிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும், பிரம்மஹத்தி தோஷம் கொண்டு அலைவாயாக" என சாபமிடுகின்றார். வைணவ க்ஷேத்ரங்கள் சென்று புண்ய தீர்த்தங்களில் நீராடும்படியும், எந்த தீர்த்தத்தால் கபாலம் நிரம்புகிறதோ, அங்கு கபாலம் கையை விட்டு விலகும் என சாப விமோசனத்திற்கு வழி கூறியதாகவும் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.
பல ஸ்தலங்களுக்கும் சென்று தீர்த்த நீராடல் செய்த சிவபெருமான் இத்தலம் வந்தார். அப்போது இங்கு கோவில் கொண்டுள்ள பெருமாள் அவரை வரவேற்று கதா தீர்த்தத்தில் நீராடும்படிக் கூறினார். அது பெருமாள் தனது கதையால் உண்டாக்கிய தீர்த்தம். சிவபெருமான் அதில் ஸ்நானம் செய்ததும், பிரம்ம கபாலத்தில் தண்ணீர் நிறைந்தது. கபாலமும் கை நழுவியது. பின்னர் ஹத்யா விமோசன தீர்த்தம் எனப்படும் பத்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
ஹரனுடைய (சிவன்) சாபத்தை நீக்கியதால் ஹரசாபஹரன் எனும் திருநாமம் கொண்டார்.
கமலநாதன், கமலவல்லி, கமல புஷ்கரிணி, கமல விமானம், கமல க்ஷேத்ரம் என ஐந்து வகை கமலங்கள் கொண்டிருப்பதால் பஞ்ச கமல க்ஷேத்ரம் என்பார்கள்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.