தேவேந்திரனின் சபை கூடி, இந்திராதி தேவர்கள் காத்திருக்கும்படியாக, வெகு தாமதமாக சபைக்கு வந்த காமதேனு பசுவை சபித்து விடுகிறான் தேவேந்திரன். கொண்ட சாபப்படி, சாதாரணப் பசுவாக பூலோகம் வந்து, இங்குள்ள வகுளாரண்யத்தில் சிவபூஜை செய்து வந்தது. மங்கண மகரிஷியின் யோசனைப்படி தனது காதுகளில் தினமும் கங்கையை எடுத்துக் கொண்டு வந்து பார்வதி - பரமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தது.
தன் கன்று பசி தாங்காமல் தவித்ததைக் கண்ட பார்வதி தேவியார், பசுவிற்கு அருள் புரிய வேண்டினார்.
ஒரு புலி வடிவம் கொண்ட சிவபெருமான், பசு வரும் வழியில் காத்திருந்து அதன் மேல் பாய்ந்தார். தான் செய்யும் நித்ய அபிஷேக ஆராதனைகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் தன்னை போக அனுமதித்தால் தான் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து விட்டு, கன்றுக் குட்டிக்கு பசியாற்றிவிட்டு, திரும்பி வருவதாகவும், தன்னை நம்பி விடுவிக்கும்படியும் கெஞ்சியது பசு. புலியும் போக அனுமதித்தது.
அதன்படியே எல்லாவற்றையும் முடித்தவிட்டு, புலியிடம் வாக்களித்தபடி, புலி வழி மறித்த இடத்திற்கு சென்றது பசு. அங்கு புலி இருந்த இடத்தில் பார்வதி - பரமேஸ்வரர் ரிஷபாரூடராய் காட்சி தந்தனர். பசு காமதேனுவாக உருப்பெற்று விமோசனம் அடைந்தது என ஸ்தல வரலாறு.
பசுவின் காதிலுள்ள கங்கை நீரால் பூஜிக்கப்பட்டதால் இறைவனுக்கு கோகர்ணேஸ்வரர் எனும் திருநாமம். கோ என்றால் பசு - கர்ணம் என்றால் காது. இதுவே காமதேனு வழிபட்ட ஸ்தலம்.
மலை மேல் உள்ள தீர்த்தம் காமதேனு தனது கொம்புகளால் உண்டாக்கியது. இதை கங்கா தீர்த்தம் என்பர்.
தனது ஆற்றல் அனைத்தையும் இழந்த பிரம்மன், இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் படைப்பாற்றலைப் பெற்றார். கபில முனிவர் மற்றும் சந்திர பகவான் லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளனர். இந்த லிங்கங்களை ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் வழிபட்டுள்ளனர்.
முழுமையான பாறையைக் கடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில். ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது.
16ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தினரால் வெளியிடப்பட்டு புழக்கத்திலிருந்த அரைக்காசு அம்மன் நாணயம் இங்குள்ள பிரஹதாம்பாளின் திருவுருவம் எனக் கூறப்படுகிறது.
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறவும் சிறு துண்டு வெல்லத்தை (உருண்டை வெல்லம்) எடுத்து, வீட்டிலுள்ள அரைக்காசு அம்மன் படத்தின் முன்பாக வைத்து, நைவைத்யம் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ பிரஹதாம்பாள் தாயே என பிரார்த்திக்க வேண்டும். பின்னர் வெல்லத்தை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். வேண்டியது நிறைவேறியதும் சேர்த்து வைத்திருந்து வெல்லக் கட்டிகளைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து அனைவர்க்கும் விநியோகிக்கலாம். இவ்வூருக்கு வரும்போது ஒரு வெல்லக்கட்டியை அன்னையின் முன்பாக வைத்து நைவைத்யம் செய்ய வேண்டும்.