துர்வாசரின் சாபம் காரணமாகக் காட்டானையாகத் திரிந்த ஐராவதம், இத்தலம் வந்து ஐராவத தீர்த்தத்தை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றது. சூரியன் ஆற்றல் பெற வேண்டி இவ்விறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான். இனன் நம்பு ஊர் என்பதே இன்னம்பர் என்றாயிற்று. (இனன் என்றால் சூரியன்).
சிவபெருமானின் ஆக்ஞைக்கிணங்க தென்னகம் வந்த அகத்தியர், இத்தலம் வந்தபோது அவருக்குத் தமிழ் இலக்கணத்தை இறைவன் உபதேசம் செய்தார். இதனால் எழுத்தறிநாதர் (அட்சரபுரீஸ்வரர்) எனப்படுகிறார்.
ஆலய நிர்வாகத்தைக் கவனித்து வந்த சுதன்மன் ஒரு சிவ பக்தன். இறைத்தொண்டு செய்வதிலும், திருப்பணி செய்வதிலும் முழு நேரத்தைச் செலவிட்டு வந்தான். ஆலயத்திற்கு வரவாக வந்த பணங்களை எல்லாம் இறைவனுக்கே செலவிட்டு வந்தான். கணக்கு வழக்கு ஏதும் எழுதி வைக்கவில்லை.
வரவு-செலவு கணக்கு பேரேடுகளுடன் தன்னை வந்து பார்க்க வேண்டும் என அரசன் திடீரென உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, செய்வதறியாது குழம்பிப் போன சுதன்மன், இறைவன் முன் நின்று காப்பாற்றும்படி அழுதான். அப்படியே மயங்கியும் விழுந்துவிட்டான்.
உதவிக் கணக்கர் வேஷத்தில் சண்டேஸ்வரரை மாற்றி, அவரையும் அழைத்துக்கொண்டு, சுதன்மன் வடிவில், அரசனிடம் சென்ற சிவபெருமான், கணக்கு சம்பந்தப்பட்ட பேரேடுகளை அரசனிடம் காண்பித்துச் சான்றிதழும் பெற்றுவிட்டார். போதாதற்கு, மற்ற ஆலயக் கணக்கர்களை சுதன்மனிடம் சென்று கணக்கைக் கற்றுக்கொள்ளச் சொன்னான் அரசன். மயங்கிக் கிடந்த சுதன்மனுக்கு விஷயம் பின்னர் தெரிய வந்தது.
இப்படி பக்தனுக்காகக் கணக்கன் வேஷத்தில் வந்த இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயம் இது.
குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்ய இங்கு வருகின்றனர். மேலும், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி ஆகிய ஹோமங்கள் இங்கு செய்வது விசேஷம் என்கின்றனர்.
தேவாரத் திருத்தலம்.