இத்தலத்திலுள்ள எட்டி மரத்தடியில் தவம் மேற்கொண்ட வால்மீகி முனிவர், திடீரென ஓர் ஒளி பரவி வருவதைக் கண்டு, தாம் இருந்த புற்றை விடுத்து, வெளியே வந்து பார்த்தார். எட்டி மரத்தடியில் அமர்ந்து அம்பிகை தவம் செய்து கொண்டிருக்கிறாள். இறைவனின் திருமேனியில் பாதியைப் பெறுவதற்கு, தவம் செய்வதாக கூறினாள் அம்பிகை. பின்னர் முனிவரின் யோசனைப்படி, அம்பிகை கேதாரீஸ்வர விரதம் அனுஷ்டித்து, லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். பிரத்யட்சமான அவரது இடப்பாகத்தைப் பெற்றாள்.
தேவர்கள் படும் கஷ்டங்களிலிருந்து அவர்களை விடுவிக்க, வால்மீக நாடி சித்தர் எனும் சித்தர் இஷ்டி யாகம் தொடங்கினார். யாகத்தைத் தடுத்து தொல்லைகள் பல கொடுத்தான் சூரபத்மன். சூரபத்ம வதத்திற்கு அச்சாரமாக யாகக் குண்டத்தில் முருகனை தோன்றச் செய்தார் சிவபெருமான்.
முருகனின் கண் பார்வையிலிருந்து மறைந்து சூரபத்மன் ஓடத் தொடங்கிய இடம் சூரமங்கலம். தந்தையை நோக்கி முருகன் தவமியற்றி வழிபட்டது கீழ் வேளூர். அன்னை சக்தியிடம் போரிட்டு சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர்.
சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் நாம் தரிசிக்கும் மயில் மீதமர்ந்த அழகிய ஆறுமுகனை உருவாக்கியவர் ஒரே சிற்பி.
சிற்ப நுணுக்கங்களில் கைதேர்ந்த, விசுவப் பிராமணக் குல மேதை ஒருவன், பஞ்ச உலோகங்களைக் கொண்டு தயாரித்த உற்சவத் திருமேனியை சிங்காரவேலர் என்ற பெயரில் சிக்கல் எனும் ஊரில் நிறுவினான்.
அதைப் போன்றே அழகான மூல மூர்த்தியை செய்ய ஆசைப்பட்ட சிற்பி, முருகப் பெருமானை மனதில் நிறுத்தி, அதற்கேற்ற கல்லைத் தேடினான். உயிரோட்டமும் ஜீவ ரேகைக் கொடிகளும், நீலமும் - கருமையும் கலந்த வண்ணம் கொண்ட கல், இறைவனருளால் கிடைத்தது.
நல்ல முகூர்த்த வேளையில் சிலை செதுக்கும் வேலையைத் தொடங்கி, உளியை எடுக்கும் போதெல்லாம் முருகனின் பெயரைத் தியானித்து, மயிலையும் அதன் மீது ஆறுமுகக் கடவுளையும் உருவாக்கினான். உடலில் ரத்த ஓட்டமும், வியர்வையும், அக்னி ஜ்வாலையும் சிலைக்கு வந்தன.
இந்த தெய்வீக அற்புத சிலையை சோழ மன்னன் முத்தரையனிடம் காண்பித்தான் சிற்பி. "சிறகுகளை செப்பனிட்டால் சிலை பறந்து விடும் போலிருக்கிறதே... அந்த அளவுக்கு உயிரோட்டம் உள்ளதே!" என்றான் அரசன். மயில் சிலைக்கு கண்ணைத் திறந்தான் சிற்பி. மயில் பறக்கத் தொடங்கியது. மயிலின் கால் நகத்தில் உளியால் பின்னப்படுத்தி மயில் பறப்பதை நிறுத்தினான் சிற்பி என ஸ்தல வரலாறு.
சிக்கல் சிங்காரவேலனை வடித்தபோது, இது போன்ற அழகிய சிலை செய்வித்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என நினைத்த முத்தரச சோழன், அதை உருவாக்கிய சிற்பியின் கட்டைவிரலை எடுத்து விட்டான். இழந்த தனது கட்டைவிரலுடன் சிற்பியால் வேறு எங்கும் சிலை செய்ய முடியாது என நினைத்தான். கட்டைவிரலை இழந்தும், இது போன்ற மற்றொரு அழகிய சிலையை, எட்டுக்குடியில் உருவாக்கினான் சிற்பி. கோபம் கொண்ட மன்னன் சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான் என வரலாறு.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் பிரம்மோற்சவம் விமரிசையாக இருக்கும். கிருத்திகைதோறும் மயில் மீதேறிய முருகனின் உலா, பால் காவடி நடைபெறும். வைகாசி விசாக காவடி விழா கண்கொள்ளாக் காட்சி.
சுப்ரமண்ய க்ஷேத்திரம்.