அடுத்தடுத்து இரண்டு கோவில்கள் இருப்பதால் இரட்டைத் திருப்பதி என்பார்கள். வடக்கு கோவில் - தெற்கு கோவில் என்று அழைக்கின்றனர்.
ஆத்ரேய சுப்பரபர் எனும் முனிவர் இத்தலத்தில் பெரிய யாகம் ஒன்றை நடத்த விரும்பினார். யாகசாலை அமைக்க வேண்டி பூமியை உழுதபோது, பூமியிலிருந்து ஒரு தராசும் - ஒரு வில்லும் கிடைத்தன. அதை வெளியே எடுத்தார் சுப்பரப முனிவர்.
முனிவரின் கை பட்டதும் தராசு பெண்ணாகவும், வில் ஆணாகவும் மாறின. இதன் காரணத்தை முனிவர் வினவியபோது, வில் வடிவில் இருந்து ஆணாக மாறிய வித்யாதரன் என்பவன், தான் தனது மனைவியை மோகித்துக் கொண்டிருந்த வேளையில் ஆகாய மார்க்கமாக சென்ற குபேரனை கவனியாது இருந்ததால், கோபம் கொண்ட குபேரன் எங்களை இவ்வாறு சபித்து விட்டான் எனக் கூறினான். மேலும் தங்களால் எங்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது எனக் கூறினான்.
பின்னர் சுப்பரபரும் மற்ற முனிவர்களும் சேர்ந்து யாகத்தை நடத்தினார்கள். பிரத்யட்சமான விஷ்ணு மூர்த்தியிடம் தாங்கள் இத்தலத்தில் தேவர்பிரானாக எழுந்தருளி பக்தர்களை ரட்சிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தனர்.
துலையும் (தராசு) வில்லும் இங்கு முக்தி அடைந்தமையாலும், எல்லோர்க்கும் மங்களம் உண்டாகிறபடியாலும், துலைவில்லிமங்கலம் என்ற பெயரில் இந்த க்ஷேத்ரம் அழைக்கப்பட வேண்டும் எனவும் பிரார்த்தித்தனர்.
எம்பெருமானும் அவ்வாறே வரமருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.