தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபட்ட ஸ்தலம் என்பதால் தேவனூர் என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி திருத்தேவூர் என்றழைக்கப்படுகிறது. தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீஸ்வரர் எனவும், வியாழன் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் எனவும் போற்றப்படுகிறார்.
குபேரனுடன் போரிட்ட ராவணன், குபேரனது சங்கநிதி-பதுமநிதி கலசங்களை எடுத்து சென்று விட்டான். வெள்ளிக்கிழமை தினத்தன்று சுக்கிர ஹோரையில், குபேரன் இவ்விறைவனை வழிபட்டு, இழந்த செல்வங்களை மீண்டும் பெறுகிறான்.
தொடர்ந்து மழை பெய்யாது பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றபோது, கௌதம ரிஷி லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு, பஞ்சத்தைப் போக்கியதாக ஸ்தல வரலாறு. இந்திரன் விருத்திரனைக் கொன்ற பாவத்தால் சாபம் கொண்டு, இந்திர பதவியிழந்து, இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்று மீண்டும் பதவி பெற்றான் என ஸ்தல வரலாறு.
ஸ்தல விருட்சமான கல்வாழை கட்டுமலை மீதுள்ள கருங்கல்லில் வளர்வது அதிசயமாக உள்ளது. இதற்கு தண்ணீர் ஊற்றுவதில்லை என்கின்றனர்.