ஸ்ரீ மித்ரசகா - சந்திரமாலினி தம்பதியினரின் அளவற்ற பக்தியின் காரணமாகவும், தொலைந்து போன கணவன் மித்ரசகாவை தேடித் தரும்படி வேண்டி நின்ற பக்தை சந்திரமாலினிக்காகவும், அவள் விரும்பியபடி தசாவதாரக் கோலத்தில் காட்சி தந்து, அவளது கணவன் திரும்பக் கிடைக்க அருள் செய்து ஆசிர்வதிக்கின்றார் திருமால் என ஸ்தல வரலாறு.
தாம்ரபர்ணியில் ஸ்நானம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாம்ரபர்ணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வதால் இதில் ஸ்நானம் செய்வது விசேஷம்.
ஸ்நானம் செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்: புண்யாயை புண்ய பூதாயை புதர்யை மலயபூப்ருத சர்வ தீர்த்த ஸ்வரூபாயை - தாம்ரபர்ணியை நமோ நம:
மூலஸ்தானத்தில் ஸ்ரீ அஞ்சேல் தசாவதாரப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டும் நின்ற திருக்கோலம் கொண்டும் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதமாக உற்சவ மூர்த்தி ஸ்ரீ அஞ்சேல் தசாவதாரப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட சிற்பமாக தசாவதாரங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு தசாவதார மூர்த்தியும் ஒவ்வொரு கிரக தோஷ பரிகார நிவர்த்திக்கு உரிய அவதாரமாக இருப்பதாக தசாவதார ஸ்லோகத்தில் நிகமாந்த தேசிகன் வர்ணித்துள்ளார்.
கணபதி, வேணுகோபாலர், சத்யபாமா, தர்ம சாஸ்தா, பெரிய திருவடி, விஷ்வக்சேனர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.