தேவ - அசுர யுத்தத்தில் உயிரிழக்கும் அசுரர்களை, ம்ருதசஞ்சீவினி மந்திரம் கூறி உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார் அசுரகுரு சுக்ராச்சார்யார்.
அந்த மந்திரத்தை கற்க வேண்டி, குரு பகவானின் மகன் கசன் அசுரகுருவிடம் வந்தான். சுக்ராச்சார்யாரிடம் மந்திரத்தை எளிதில் கற்றுக் கொண்ட கசன், அவரது மகள் தேவயானையின் அன்பையும் சம்பாதித்தான்.
தேவகுருவின் மகன் தங்களது குருவிடம் மந்திரத்தை கற்றுக் கொண்டதை கண்டுபிடித்த அசுரர்கள் அவனைக் கொன்று, அவனது சாம்பலை பழரசத்தில் கலந்து சுக்ராச்சார்யாரிடம் தந்தனர். அவரும் பருகிவிட்டார். வெகு நாட்களாக கசனைக் காணவில்லை என தேவயானை அவளது தந்தையிடம் முறையிட, அவர் தனது ஞானதிருஷ்டியால், கசன் தன் வயிற்றுக்குள் இருப்பதை தெரிந்து அறிந்தார்.
தன் வயிற்றை வெடிக்கச் செய்து கசனை வெளியே கொண்டு வந்தார் அசுரகுரு. வெளியே வந்த கசன், ம்ருதசஞ்சீவினி மந்திரத்தைக் கூறி சுக்ராச்சார்யாரை உயிர்ப்பித்தான். தனது மகளை மணந்து கொள்ளும்படி அசுரகுரு கேட்க, தான் குருவின் வயிற்றிலிருந்து வெளி வந்ததால், தேவயானையின் சகோதரன் ஆவேன் ஆகையால் திருமணம் செய்வதற்கில்லை என மறுத்து விட்டான் கசன்.
இதனால் கோபம் கொண்ட தேவயானை, கசன் அசுர லோகத்தை விட்டு வெளியேறா வண்ணம் இருக்க காவலுக்கு சப்த பர்வதங்களை நியமித்தாள்.
தனது மகனை நீண்ட காலமாக காணவில்லையே என வருந்திய குரு பகவான், நாரத முனிவரின் யோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து நீண்ட தவம் மேற்கொள்கின்றார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த நாராயணன் சித்திரங்கள் வரையப்பட்ட தேர் ஒன்றில் பிரத்யட்சமானார். கசனை மீட்க சுதர்ஸன சக்கரத்தாழ்வாரை அனுப்பினார். ஸ்ரீ சுதர்ஸனரும் சப்த பர்வதங்களை விரட்டியடித்து விட்டு கசனை மீட்டுக் கொண்டு வந்து குரு பகவானிடம் ஒப்படைத்தார் என ஸ்தல வரலாறு.
'குரு வீற்றிருந்த துறை' என்பது மருவி 'குருவித்துறை' என்றானதாக கூறுகின்றனர்.
சித்ரா பௌர்ணமி தினத்தன்று பெருமாள் குருவுக்கு காட்சி தந்த நிகழ்வை கொண்டாடுகின்றனர்.