சுண்டைக்காய் இவ்வூரின் பிரதான பயிரிடுதலாக இருந்ததாம். இதனால் இவ்வூரை சுண்டக்காமுத்தூர் என்றழைத்தனராம். சுண்டைக்காய் பயிரிட்டிருந்த நிலத்தில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது கண்டு தோண்டி பார்த்ததில் அம்மனின் சிலை புதையுண்டிருப்பது தெரிய வந்தது. அதை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் என ஸ்தல வரலாறு.
ஒவ்வொரு முறையும் என்ன பயிரிட வேண்டும் என அம்மனை கேட்டு, திருவுளச்சீட்டு போட்டு, உத்தரவு பெற்ற பின்னரே பயிரிடும் சம்பிரதாயம் கொண்டுள்ளனர் இவ்வூர் மக்கள். இப்போது கோவையின் மற்ற ஊர்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து அம்மனை கேட்டு செல்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை செல்லாண்டியம்மனின் காலடியில் வைத்து தங்கள் சந்ததியை காக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றனர். கருப்பண்ணசாமிக்கு மண் குதிரையையும், அரிவாளையும் காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன் பூர்த்தி செய்கின்றனர்.
இக்கோவிலினருகே உள்ள கிணறு வற்றியதே இல்லை என கூறுகின்றனர்.