ஆதியில் லட்சுமி நரசிம்மர் கோவிலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு தவம் செய்து கொண்டிருந்த தேவராஜ மகரிஷி செய்த யாகத்தில் பிரத்யட்சமான சதுர்புஜ ராமரை இங்கேயே கோவில் கொண்டு, பக்தர்களுக்கு அருளும்படி, மகரிஷி வேண்டிக் கொண்டதால், இங்கு ராமர் எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு.
காஞ்சிபுரத்திலிருந்து திருவஹீந்திரபுரம் போவதற்காக புறப்பட்ட ஸ்வாமி வேதாந்த தேசிகர், போகும் வழியில் இத்தலத்தில் ஒரு நாள் தங்கினார். கடலை வியாபாரி ஒருவன், தனது நிலத்தில் குதிரை ஒன்று மேய்வது கண்டு, ஸ்வாமி தேசிகரிடம் போய் விபரத்தைக் கூறினான். தேசிகர் சென்று பார்த்தபோது குதிரை மேய்ந்த இடமெல்லாம், பொன்மணிகள் உதிர்ந்திருப்பதைக் கண்டார். இது ஹயக்ரீவரின் திருவிளையாடல் என்று கூறினார்.
இந்த பொன் மணிகளை தூற்றியபோது 2 கி.மீ சுற்றளவுள்ள இடங்களிலெல்லாம் பொன் மணிகளாக சிதறியதாம். இதனால் இவ்வூருக்கு பொன் பதர் கூடம் என்ற பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு. இந்த பொன் கதிர்களை சாலில் (பெரிய மண் பானை) வைத்து பாதுகாத்த இடம் சாலூர், மற்றும் எடைபோட்ட இடம் எடையூர் என்றும் இரு ஊர்கள் அருகாமையில் உள்ளன.
நள வெண்பா பாடிய புகழேந்தி பிறந்த ஸ்தலம். 63 நாயன்மார்களுள் ஒருவரான கூற்றுவ நாயனார் வாழ்ந்த ஸ்தலம்.