பிரளயம் முடிந்து மீண்டும் உலகம் உருவானபோது, சிவபெருமான் ரிஷபாரூடராய் வான் வழியே உலாவருகையில்,
நறுமணம் வீசும் மலர்ச்சோலைகள் உள்ள இத்தலத்திற்கு வந்தார். தாமே இங்கு இருக்க விரும்பியதாலும், தேவர்களும்,
முனிவர்களும் இறைவனை இங்கேயே இருக்க வேண்டியதாலும், இங்கு லிங்கவடிவமாக அமர்ந்தார்.
தாமிரபரணி ஆற்றின் தாமரை மலர் மேல் சங்கு உருவாய் தோன்றிய குழந்தையை, வசுசேனன் எனும் அரசன் எடுத்து
ராஜராஜேஸ்வரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். கல்வி - கேள்விகளில் தேர்ச்சி அளித்தான். உமையவளே இக்குழந்தையாக
அவதரித்தவள்.
ராஜராஜேஸ்வரி சதுரங்க விளையாட்டான சொக்கட்டான் ஆட்டத்தில், அனைவரையும் தோற்கடித்து வெற்றிக் கொடி
நாட்டி வந்தவள். இவளை சொக்கட்டான் ஆட்டத்தில் வெல்பவருக்கே மணம் முடித்து தருவதாக அரசன் அறிவிப்பு
வெளியிட்டிருந்தும், ஒருவரும் ஜெயிக்கவில்லை. மகளை அழைத்துக் கொண்டு க்ஷேத்ராடனம் புறப்பட்டான் அரசன்.
இத்தலத்திற்கு வந்தபோது, ஒரு வயோதிகனாக உருக் கொண்டு வந்த சிவபெருமான் இவளுடன் சொக்கட்டான்
ஆட முன் வந்தார். இறுதிப்போட்டியில் ராஜராஜேஸ்வரியை வென்று, தனது சுயவடிவம் காண்பித்து, வென்றதன்
பரிசாக அவளை மணந்து கொண்டார். இதனால் இறைவனுக்கு சதுரங்க வல்லப நாதர் என்ற பெயர் வந்தது.
மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த சோலையாக இருந்த பகுதி என்பதால் புஷ்பகவனம் என்ற பெயர் பெற்றது.
இறைவன் புஷ்பகவனேஸ்வரர் என்ற பெயரையும் பெற்றார்.
சப்த மாதர்களில் ஒருவளான சாமுண்டி - ராஜராஜேஸ்வரி குழந்தையாக இருந்தபோதே துணையாக வந்தவள்.
வெளிப்பிரகாரத்தில் சாமுண்டீஸ்வரியாக சந்நிதி கொண்டுள்ளார்.
சோம வாரங்களில் 64 வகை பூஜை சாமான்களுடன் புஷ்பகவனேஸ்வரரை அபிஷேக ஆராதனை செய்து
வழிபடுபவர்கள் சிவ அபவாதங்கள் மற்றும் சாபங்கள் நீங்கி, நலன் பெறுவர்.
ராஜராஜேஸ்வரிக்கு 12 செவ்வாய்க்கிழமை தினங்களில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால்
செவ்வாய் - ராகு - சுக்ரன் தோஷங்கள் விலகும். திருமணத்தடை நீங்கும்.
சாமுண்டீஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் செய்வினை தோஷங்கள் விலகும்.
சுக்ர வார வழிபாடாக 27 நெய் தீபம் ஏற்றி, 27 முறை வலம் வந்து சிகப்பு புடவை அணிவித்து பூஜித்தால் அனைத்து
கஷ்டங்களும் விலகும்.
சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி 10 நாட்களுக்கு சாமுண்டிக்கு விழா எடுக்கின்றனர்.
எலிக்கடி மற்றும் விஷ ஜந்துக்களின் கடிகள், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் போன்றவைகளின்
தாக்கத்திலிருந்து குணமடைய சாமுண்டீஸ்வரி சந்நிதியில் மந்திரித்த வேர் தருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜித்த வேர்
கையில் கட்டி விடுகிறார்கள்.
காஞ்சி மகா பெரியவர் இத்தலத்திற்கு 1947 ஆம் வருடம் வருகை தந்தார். 48 நாட்கள் நடைபெற்ற அதிருத்ர
ஹோமத்தில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். முதல் மூன்று நாட்கள் கோவிலிலேயே
தங்கினார். திரண்டு வந்த ஊர் மக்களுக்கு இத்தலத்து சாமுண்டீஸ்வரியின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
ஆலயத்தின் முன்பாக உள்ள க்ஷீர புஷ்கரணியில் வைகாசி திருவிழாவின்போது தீர்த்தவாரி நடைபெறும்.
தேவாரத் திருத்தலம்.