பூலோகத்தில் தவம் செய்து சிறந்த ஸ்தலமாக தேடிக் கொண்டிருந்த பார்வதிக்கு, திருநாவலூரைக் காட்டினார் ஜம்புநாதர். ஜம்புநாத தீர்த்தத்தைக் கொண்டும், விநாயகர் கொண்டு வந்த மலர்களாலும், மனக்கட்டுப்பாட்டுடன் தியானம் செய்து இறைவனை அடையலாம் என்று அம்பிகை வழி காட்டியதால் மனோன்மணி எனப் பெயர் கொண்டாள். பக்தர்களை ரட்சிக்க பக்தஜனேஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கேயே எழுந்தருள வேண்டும் என அம்பிகை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இறைவன் இங்கு கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இவ்வூர் முழுவதும் நாவல் மரங்கள் மிகுந்து காணப்பட்டதால், நாவலூர் எனப் பெயர் கொண்டது.
அந்தகாசுர போரின் போது, இறந்தவர்களையெல்லாம் மீண்டும் பிழைக்க வைத்துக் கொண்டிருந்த சுக்கிரன் மீது கோபம் கொண்டு அவரை விழுங்கிய சிவபெருமான், பல வருடங்களாக வயிற்றுக்குள் யோகத்தில் இருந்த சுக்கிரன் மீது கருணை கொண்டு, அவரை வெளிவரச் செய்து, கிரகப் பதவியும் தந்ததாக வரலாறு. அத்தகைய சுக்கிரன் இங்கு லிங்க ரூபத்தில் இருக்கின்றார்.
ஆலயத்தின் மேற்கே கோமுகி ஓடையும், ஊருக்கு தெற்கே கெடில நதியும் (1 கி.மீ), வடக்கே பெண்ணையாறும் ஓடுகின்றன. நாலாபுறமும் வயல்களால் சூழப்பட்ட அழகிய கிராமம்.
ஆதிசேஷனின் விஷ மூச்சுக் காற்றால் உடம்பெல்லாம் கருப்பான கருடன், தனது கருமை நிறத்தைப் போக்கிக் கொள்ள, இங்குள்ள ஜம்புநாத தீர்த்தத்தில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு, மேனியை வெண்மையாக்கிக் கொண்டது.
கருடன் உருவாக்கிய நதி, கருடநதி எனப் பெயருற்று, பின்னர் கெடில நதி என்றானதாக கூறுவர். நம்பியாரூரன் எனப்படும் சுந்தரரின் அவதார ஸ்தலம் இது.
சுந்தரரின் வளர்ப்புத் தந்தை சிவனடியார்களை வரவழைத்து அன்னமிட்டு 100 பொற்காசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் அருவருப்பான கோலத்தில் வந்த ஒரு திகம்பரரைப் பார்த்து அனைவரும் சலித்துக் கொண்டனர். சுந்தரரின் வளர்ப்புத் தந்தையோ அவரையும் சமமாகப் பாவித்து தொண்டாற்றினார். அனைவரையும் சமமாகப் பாவிக்கும் நற்பண்புகளையுடைய அவரை இறைவன் ஆட்கொண்டார்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.