கோவிலுக்கு வேண்டிய விமானம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்திரம், நதி, நகரம், ஆரண்யம் ஆகிய ஏழு லட்சணங்கள் பொருந்திய ஸ்தலம் என்பதால் சப்தாம்ருத க்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.
மகாலட்சுமி தவம் இருந்து இத்தலத்தில் பெருமாளை மணந்து கொண்டதாக ஐதீகம். லட்சுமி தவம் மேற்கொண்டதால் இத்தலத்திற்கு லட்சுமி வனம் என்ற பெயரும் உண்டு. மகாவிஷ்ணு - மகாலட்சுமி திருக்கல்யாணம் நடந்த இடம் என்பதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் என்பார்கள்.
மகாலட்சுமியானவள், பகவானுக்குப் பட்டமகிஷியாக வேண்டி, திருக்கண்ணமங்கை ஸ்தலத்து வனத்தில் உள்ள தர்சன புஷ்கரணி கரையில் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். அவளுக்குப் பிரத்யட்சமான பகவான், அவள் கோரியபடியே அவளை மணந்து, திருக்கல்யாணக் கோலம் கொண்டு, இங்கு நித்ய வாசம் செய்கின்றார் என ஸ்தல வரலாறு.
தர்சன புஷ்கரணி நீரை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தாள் மகாலட்சுமி. இதனால் அபிஷேகவல்லி என்ற பெயரைக் கொண்டாள் என ஸ்தல வரலாறு.
வேதங்களை மது-கைடபர்கள் அபகரித்துச் சென்றபோது, பகவானை சேவிக்க வைகுண்டம் சென்றார் பிரம்மா. பகவான் அங்கு இல்லாதது கண்டு, திருக்கண்ணமங்கையில் கல்யாண கோலத்தில் வாசம் செய்வதை தெரிந்து கொண்டு இங்கு வந்தார். இத்தலம் வந்த பிரம்மா, தர்சன புஷ்கரணி கரையில் அமர்ந்து தவம் செய்யலானார்.
வாத்ஸல்யத்துடன் 'வத்ஸ' என்று பிரம்மாவை அழைத்து வேதங்களைத் தந்ததினால், பகவான் பக்தவத்ஸலன் என்ற திருநாமம் கொண்டார். பக்தர்கள் அழைத்ததும் ஆவி போல் பறந்து வருவதினால், பத்ராவி என்ற திருநாமம் கொண்டார்.
பிரம்மாவுக்குப் புஷ்கரணி கரையில் தரிசனம் தந்தார் பெருமாள். இதனால் தர்சன புஷ்கரணி என்றானது.
தர்சன புஷ்கரணியில் ஸ்நானம் செய்து சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக் கொண்டான் என ஸ்தல வரலாறு.
பெருமாளையும் தாயாரையும் பிரிய மனமில்லாத முனிவர்கள் தேனீக்கள் வடிவில் இங்கேயே தங்கி வழிபடுகின்றனர். அந்த தேன்கூடுதான் தாயார் சந்நிதியில் உள்ளது.
நாதமுனிகளின் சீடனான திருக்கண்ணமங்கையாண்டான் ஆனித் திருவோணத்தன்று இத்தலத்தில் அவதரித்தவர். பெருமாளுக்கு துளசி புஷ்பாதி கைங்கர்யம் செய்து வந்தார். திடீரென ஒரு நாள் அனைவரும் பார்த்திருக்க ஆலயத்துள் பேரொளி பரவியது. திருமங்கையாண்டான் மறைந்து பெருமாள் திருவடிகளில் ஐக்யமாகி விட்டார் என ஸ்தல வரலாறு.
திருநின்றவூரில் பக்தவத்ஸலரை சேவிக்க இயலாது திரும்பிப் போன ஆழ்வாரை - திருக்கடல்மல்லையிலும், கண்ணமங்கையிலும் சேவை சாதித்தார் பெருமாள் என ஸ்தல வரலாறு.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களுள் ஒன்று - சப்தாம்ருத க்ஷேத்திரம்.