திருமாலுடன் ஏற்பட்ட ஊடலால், அவரையும் வைகுந்தத்தையும் பிரிந்த மஹாலட்சுமி பூலோகம் வந்து, இவ்வூரிலுள்ள துளசி வனத்தில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். மருமகனுக்காக மகளைத் தேடி பூவுலகில் அலைந்த சமுத்ரராஜன், இங்குள்ள துளசி வனத்தில் அவளைக் கண்டுபிடித்து, வைகுந்தம் வரச்சொல்லி அழைக்கிறார். அவள் வருவதாக இல்லை.
வைகுந்தம் சென்று திருமாலை வேண்டுகிறார். மாமனாரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, திருமால் இங்கு வந்து, லட்சுமியை அழைத்துச் செல்கின்றார்.
திருவாகிய லட்சுமி இங்கு தங்கி தவம் இருந்ததால் இவ்வூர் திருநின்றவூர் எனப் பெயர் கொண்டது. 'என்னை பெற்ற தாயார்' ஆகிய சுதாவல்லியை குபேரன் வழிபட்டு, இழந்த தன் செல்வங்களை மீண்டும் அடைந்தார். இதனால் தாயாரை 'வைபவலட்சுமி' என்று போற்றுவார்கள்.
கல்யாணக் கோலத்தில் சமுத்ரராஜனுக்குக் காட்சி தந்த பெருமாள், சமுத்ரராஜனின் பிரார்த்தனைக்கு இணங்க, தாயாரை 'என்னை பெற்ற தாய்' என்று வணங்கப்படுவாள் என ஆசி கூறினார்.
திருமங்கை ஆழ்வார் தனது திவ்யதேச யாத்திரையின்போது இத்தலத்திற்கு வந்தார். பெருமாள் அவருக்குக் காட்சி தராமல் பாராமுகமாய் இருந்துவிட்டார். ஆழ்வாரும் இத்திருப்பதியைக் கடந்து சென்றுவிட்டார்.
ஆழ்வாரின் வருத்தத்தைத் தாயார் பெருமாளிடம் எடுத்துக் கூறினார். உடனே பெருமாள் ஆழ்வாரைத் தேடி திருக்கடல்மல்லை வந்து, அங்கு சேவை சாதித்து, தனக்கு ஒரு பாசுரம் பிரசாதிக்கும்படி வேண்டினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
'நின்றவூர் நித்திலத்தை' எனத் தொடங்கிப் பாடி மங்களாசாஸனம் செய்தார் ஆழ்வார். அதாவது, 'முத்துக்கு ஒப்பானவர்' எனத் தொடங்கிப் பாடுகிறார்.
இது ஸ்ரீநிவாச க்ஷேத்ரம் எனப் போற்றப்படுகிறது.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.