1008 வேதியர்களைக் கொண்டு யாகம் ஒன்றை செய்யத் தொடங்கினான் பாண்டிய மன்னன். 1007 பேர்கள் மட்டுமே வந்திருந்ததால், யாகம் தடைப்படாமலிருக்க விநாயகரை வேண்டினான். 1008வது வேதியராக விநாயகப் பெருமானே வந்து யாகம் பூர்த்தி அடைய உதவினார் என ஸ்தல வரலாறு.
மேலும் இவ்வூரைப் பற்றிய சுவையான கதை ஒன்று கூறப்படுகிறது. ஆண்டாள் கவிராயர் என்பவர் இவ்வூருக்கு வந்தார். திரும்பச் செல்லும் பேருந்து உடனே கிடைக்காததால் இங்கு வெகு நேரம் காத்திருந்தார். இவ்வூரில் உணவு விடுதிகள் ஒன்றும் காணப்படாததால் சாப்பிடாமல் பசியோடு காத்திருந்தார். உபசரிப்பார் ஒருவருமில்லை.
இந்நிலையில் தனது ஊர் திரும்பியதும் கவிதை ஒன்றை எழுதினார்: 'ஆறுமுகமங்கலத்திற்கு ஆரொருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள்... சொன்னேன்... சொன்னேன்...' என கவிதை எழுதிவிட்டார்.
இதனால் மனம் நொந்த இவ்வூர் மக்கள் ஒரு பிள்ளையார் கோவிலையும், அன்ன சத்திரத்தையும் கட்டி 1008 அடியவர்களுக்கு அன்னதானம் செய்வதாக அறிவித்தனர்.
அடியவர்களிலும் ஒருவர் குறையவே 1008வது ஆளாக பிள்ளையாரே வந்து உணவு உண்டார்.
ஆண்டாள் கவிராயரையும் விருந்துண்ண அழைத்திருந்தனர். விருந்துண்ட மகிழ்ச்சியில் கவிராயர் முதலில் எழுதிய கவிதையை மாற்றி எழுதினார்: 'ஆறுமுகமங்கலத்திற்கு ஆரொருவர் போனாலும் சோறு உண்டு போங்கள்... சொன்னேன்... சொன்னேன்...' என எழுதினாராம்.
யாகத்தை பூர்த்தி செய்யவும் விருந்துண்ணவும் 1008வது ஆளாக பிள்ளையாரே வந்ததால் ஆயிரத்தெண் பிள்ளையார் கோவில் எனப் பெயருற்றது.