63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும் அவரது மனைவியான மங்கையர்க்கரசியும் இவ்வூரில்தான் பிறந்தனர். சிவனடியார்களுக்கு தொண்டுகளைச் செய்தும், சிவபூஜையில் ஈடுபட்டு வந்த திருநீலநக்க நாயனார், தினந்தோறும் கொன்றை மலர்களால் அர்ச்சித்து ஸ்ரீ அயவந்தீஸ்வரரை வழிபட்டு வந்தார்.
இத்தம்பதியினர் ஒரு நாள் சிவபூஜை செய்து கொண்டிருக்கும்போது, சுதைச்சிலம்பி எனப்படும் நூல் நூற்கும் வகையைச் சேர்ந்த சிலந்தி ஒன்று உத்தரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது விழுந்தது. கொப்புளங்களை உண்டாக்கும் விஷத்தன்மையுடைய பூச்சியினம் என்பர்.
இதை பார்த்துவிட்ட திருநீலநக்கரின் துணைவியார், லிங்கத் திருமேனியில் விழுந்த சிலந்தியை அகற்றும் எண்ணத்தில், வாயால் ஊதினார். அப்போது வாயிலிருந்த உமிழ்நீரும் சிவபெருமான் மீது பட்டுவிட்டது. இதைக் கண்ணுற்ற திருநீலநக்க நாயனார், 'சிவபூஜைக்கு குந்தகம் விளைவித்து விட்டாளே!' என வருந்தி, 'உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. நீ ஆகம முறைகளை மீறிவிட்டாய். இனி உனக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உன்னை இக்கணமே துறந்தேன்!' என சபதமிட்டார்.
வழிபாட்டை முடித்துக் கொண்டு நீலநக்க நாயனார் வீடு திரும்பிவிட்டார். கணவனின் ஆணையை மீறாத மனைவி கோவிலிலேயே தங்கிவிட்டார். அன்றிரவு நாயனாரின் கனவில் தோன்றிய இறைவன், 'உன் மனைவி வாயால் ஊதி எச்சில் படுத்திய இடம் தவிர்த்து மற்ற இடங்களிலெல்லாம் கொப்புளம் உண்டாகியுள்ளது. வந்து என் திருமேனியைப் பார்' என்று கூறினார்.
மறு நாள் கோவிலுக்கு சென்று இறைவனின் திருமேனியைக் கண்டு அதன் மீதுள்ள கொப்புளங்களைக் கண்டு வேதனை கொண்டார் நாயனார். பக்தியினால் மங்கையர்க்கரசி செய்த தொண்டை, அபச்சாரமாக கருதியதற்காகவும் வருந்தினார். அதே சமயம் மனைவிக்காக இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி வியந்து, மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மற்றும் அவர்தம் மனைவியார் மதங்கசூளா மணியார் ஆகியோர் சீயாத்தமங்கை வருகை புரியப் போவதை அறிந்து, அவர்களுக்கு மலர்ப்பந்தல் போட்டு வரவேற்று உபசரித்து திருவமுது செய்வித்தார் நீலநக்க நாயனார்.
பிரம்மதேவனுக்கு அயன் எனப் பெயர். அயன் போற்றி வழிபட்டதால், அதாவது வந்திக்கப்பட்டதால் இவ்வூருக்கு அயவந்தி எனப் பெயர் வந்தது. ஸ்ரீயாகிய மஹாலட்சுமி, மாசாத்தனாகிய பிரம்மன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி வழிபட்டதால், ஸ்ரீ சாத்தமங்கை எனப் பெயருற்று, நாளடைவில் மருவி, சீயாத்தமங்கை என்றானது.
தேவாரத்திருத்தலம்.