அ - விநாசி .. அதாவது 'அ' என்பது இன்மையைக் குறிக்கும், 'விநாசி' என்றால் விநாசம், அழிவு. அவிநாசி என்றால் எக்காலத்திலும் விநாசம் இல்லாத என்று பொருள். விநாசம் இல்லாத ஊர் அவிநாசி.
சங்காரம் காரணமாக பிரளய வெள்ளத்தில் நின்று பிரளய தாண்டவம் ஆடினார் சிவபெருமான். பார்த்துக் கொண்டிருந்த உமையன்னை பிரளய வெள்ளத்தில் அடங்கி விட அக்னி தாண்டவமாக சுத்த சங்காரதாண்டவம் ஆடினார்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவம் கண்டு பயந்த தேவர்கள், இத்தலத்தில் ஒளிந்து கொண்டனர். புகுந்து ஒளிந்த ஊர் புக்கொளியூர் என்றானது.
காசி விஸ்வேஸ்வரனிடமிருந்து ஒரு வேர் கிளையாகப் பிரிந்து வந்து இங்கு முளைத்து அவிநாசியப்பர் ஆனதாகத் தல வரலாறு. காசியில் வாசி அவிநாசி என்பர்.
இத்தலத்தில் உமையன்னை ஓர் மாமரத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். அன்னையின் தவத்தை மெச்சி பிரத்யட்சமான இறைவன் உமையவளுக்கு பெருங்கருணை நாயகி எனப் பெயர் சூட்டி, தமது வலது பாகத்தில் இருக்கப் பணித்தார் எனத் தல வரலாறு.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரின் மாடவீதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரெதிரான வீடுகள் இரண்டில், ஒரே காலத்தில், ஒரு வீட்டில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது. அது குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன், இவ்விரண்டு வீடுகளை சேர்ந்த சிறுவர்கள் இருவர், நீராட குளத்திற்கு சென்றனர் என்றும், ஒரு சிறுவனை மடுவிலிருந்த முதலை விழுங்கிவிட்டது என்றும் மற்றொரு சிறுவனுக்கு இன்று உபநயனம் நடக்கின்றது என்றும் ஊர் மக்கள் கூறினார்கள். இக்காரணத்தினால் ஒரு வீட்டில் மங்கல ஒலி என்றும் மறு வீட்டில் அழுகை ஒலி என்றும் கூறினார்கள்.
அவிநாசியப்பரை தரிசிக்கும் முன்பாக இறந்த சிறுவனின் பெற்றோர்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த சுந்தரர், இவ்வூர் குளத்தை நோக்கி சென்றார். ஊர் மக்களும் பின் தொடர்ந்தனர்.
நீர் இல்லாமல் வற்றியிருந்த குளத்திற்கு முன் நின்று, இறைவன் மீது பதிகங்கள் பாடலானார். முதல் பதிகத்திலேயே பெருமழை பெய்து வறண்ட குளத்தில் நீர் நிரம்பலாயிற்று. இரண்டாம் பதிகத்தில் முதலை வந்து சேர்ந்தது. மூன்றாம் பதிகத்தில் ருத்ரன், பிரம்மன், யமன் ஆகிய மூவரும் தோன்றி இறந்த சிறுவனின் உயிரைத் திரும்ப தந்தனர். நான்காம் பதிகம் முடிக்கும் முன் குளத்திலிருந்து வெளி வந்த முதலை, விழுங்கிய பிள்ளையை, அன்று வரை சென்ற வயது நிரம்ப, கரை சேர்த்தது எனத் தல வரலாறு. பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு சுந்தரரே உபநயனம் செய்வித்ததாக கூறப்படுகிறது.