சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அரண்மனைக்குத் திரும்ப முடியவில்லை. தினமும் சிவபூஜை செய்து முடித்த பின்னரே உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மன்னன், சிவபூஜை செய்யாது உணவைத் தொட மாட்டேன் என்றான். அமைச்சர்கள் வனத்திற்குள் புகுந்து சிவலிங்கம் ஏதாவது இருக்கின்றதா எனத் தேடினார்கள். எங்கேயும் லிங்கம் கிடைக்காததால், ஆப்பு ஒன்றை எடுத்து வந்து மரத்தடியில் ஊன்றினார்கள். அதையே லிங்கமாகக் கருதி வழிபடச் சொன்னார்கள்.
"இந்த ஆப்பில் சிவபெருமான் தோன்றவில்லை என்றால் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன்" எனக் கூறிய மன்னன், அதற்காக முயற்சிக்கும் வேளையில், சிவபெருமான் பிரத்யட்சமானார் என்பது ஸ்தல வரலாறு. இதனால் அவர் ஆப்புடையார் என்ற திருநாமம் கொண்டார்.
இவ்வூர் பஞ்சத்திலிருந்தபோது, நைவேத்தியம் செய்ய அரிசி கிடைக்காத காரணத்தினால், அர்ச்சகர் வைகை ஆற்று மணலை உலையிலிட்டார். அந்த மணலையே இறைவன் அன்னமாக்கினார். இதனால் இவருக்கு அன்னவிநோதன் என்ற பெயர் உண்டாயிற்று.
பங்குனி உத்திரத்தன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் குதிரை வாகனத்தில் இத்தலத்திற்கு வந்து ரிஷப வாகனத்தில் திரும்பிச் செல்வார்.
ஐப்பசி அன்னாபிஷேகத்தன்று பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்வார்கள். கழுத்தில் புடலங்காய் மாலை, கருகமணி காதணிகள், அஞ்சனம் தீட்டிய முக்கண்கள் என மிகவும் சிறப்பாக அலங்காரம் செய்வார்கள்.