சூர்ய வம்சத்தைச் சேர்ந்த துந்துமாரன் எனும் அரசனுடைய மகன் ஸ்வேதன். ஸ்வேதனுக்கு 9 வயதில் மரணம் குறிக்கப்பட்டிருந்தமையால், தனது ஆயுளை நீட்டிக்க வேண்டி இங்கு தவமிருந்தான். ஸ்ரீநிவாசரின் அருளால் ஆயுள் நீட்டிக்கப்பெற்றான் எனத் தல வரலாறு கூறுகிறது.
இத்தலத்து புஷ்கரிணி வெண்மையாக இருப்பதால் ஸ்வேத புஷ்கரிணி (வெள்ளைக்குளம்) எனப் பெயர் பெற்றது.
அப்ஸரஸ் மங்கைகளின் தலைவியான சுமங்கலை என்பவள் தன் தோழிகளுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள குளத்தின் பூக்களைக் கொய்யத் தொடங்கினாள். இரவு நேரம் முடிந்துவிட்டபடியால் கூட வந்தவர்கள் போய்விட்டனர். தனித்து விடப்பட்ட சுமங்கலை, அங்கு தவம் மேற்கொண்டிருந்த கபில முனிவரைக் கேலி செய்தாள். கோபம் கொண்ட கபில முனிவர், அவள் விண்ணுலகம் போகாது பூலோகத்தில் மானிடப் பெண்ணாகத் திரிவாள் எனச் சபித்தார்.
தவற்றிற்கு மன்னிப்பு கோரிய சுமங்கலை சாப விமோசனம் வேண்டி நின்றாள். 'நீ ஒரு வீரனை மணப்பாய். அவனை நாராயணதாசனாக மாற்ற வேண்டியது உன் பொறுப்பு. அப்போது உங்கள் இருவருக்கும் நற்கதி கிட்டும்' எனக் கூறினார் கபில முனிவர். பின்னர் தனித்து விடப்பட்ட சுமங்கலையை, அந்தணர் ஒருவர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, குமுதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
அருகேயுள்ள திருக்குறையலூரில் பிறந்த நீலன் என்பவன் பெரிய வீரனாக மாறி திருமங்கை என்னும் ஊருக்கு அரசனானான். குமுதவல்லியைப் பற்றிக் கேள்வியுற்று அவளை மணக்க விரும்பி அவளது வளர்ப்புத் தந்தையை அணுகினான். நாராயணதாசனாக மாறுவதாக இருந்தால், மணக்கத் தயார் என குமுதவல்லி நாச்சியார் நிபந்தனை விதிக்கிறாள்.
பரமபாகவதராகிய அந்தணரால் வளர்க்கப்பட்ட குமுதவல்லி, திருமங்கை மன்னரை மணந்து, அவரைத் திருத்தி பாகவத கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினாள்.
இப்பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டி, திருமங்கை மன்னன், நம்பி எம்பெருமானிடம் திருவாழி, திருச்சங்கு இலச்சினை பொறித்துக்கொண்டு, பன்னிரு திருநாமங்களை (பஞ்ச சமஸ்காரம்) இட்டுக்கொண்டு, குமுதவல்லியை மணந்தார் எனத் தல வரலாறு கூறுகிறது.
திருமங்கை மன்னனாகிய திருமங்கை ஆழ்வார் இவ்வூருக்கு வரும்போதெல்லாம், மஞ்சள் பூசிய தேங்காய்களைக் கொடுத்து அவரை வரவேற்பார்களாம். குமுதவல்லியை மணந்து இவ்வூர் மாப்பிள்ளையானதால் இந்த வரவேற்பு எனக் கூறப்படுகிறது.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, மேலும் திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் இது வாமதேவ பீடம். மூலவர்: யோகீஸ்வரர்.
11 திவ்ய தேசத் தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி பார்வதி சென்றாள். எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்கொள்ளாமல் செருக்குடன், யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக்கொண்டாள் பார்வதி.
நடந்தவை அனைத்தையும் அறிந்துகொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்றுப் பயந்த முனிவர்கள், திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களைச் சாந்தப்படுத்தினார் எனத் தல வரலாறு கூறுகிறது.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாகத் திருமால் சேவை சாதிக்கின்றார் எனத் தல வரலாறு கூறுகிறது.