வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவேரி ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் ஸ்தலம் என்பதால் ஐயாறு என்பர். திரு சேர்த்து திருவையாறு என்றானது. ஜீவன் முக்திபுரம், தட்சிண கைலாஸம், பஞ்சநதம் மற்றும் காவேரிக்கோட்டம் என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது. சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரிணி, கங்கை, பாலாறு, நந்தி தீர்த்தம் ஆகிய ஐந்து நதிகள் சேர்ந்திருப்பதாக ஐதீகம்.
காசிக்கு சமமாக கூறப்படும் ஆறு ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. ஐயாறப்பர் ஆதிசைவராக வந்து தன்னைத்தானே பூஜை செய்த அற்புத நிகழ்வு நடந்த ஸ்தலம் இது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய எல்லா சிறப்புக்களையும் கொண்ட ஸ்தலம். சப்த ஸ்தானம் என்று வழங்கப்படும் ஏழு ஸ்தலங்களுள் முதன்மையான ஸ்தலம். சித்திரை பௌர்ணமி கழிந்ததும் சப்தஸ்தான உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.
கைலாஸ தரிசனம் காண வேண்டி ஸ்தல யாத்திரை மேற்கொண்டிருந்த அப்பர் ஸ்வாமிகள் நடக்க முடியாமல், மார்பினால் உந்தி தவழ்ந்து மலை ஏறிக் கொண்டிருந்தார். முனிவர் வடிவில் வந்த இறைவன் தடுத்துப் பார்க்கிறார். எவ்வளவு சொல்லியும் கேளாமல் பயணத்தை தொடர்கிறார் அப்பர் பெருமான். முடிவில் அங்கிருந்த பொய்கை ஒன்றினை காட்டுகிறார் முனிவர். அதில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் உள்ள குளம் ஒன்றில் எழுந்திருக்கின்றார். அப்போது அவருக்கு கைலாய காட்சி காட்டியருளினார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த ஐதீகத்தைக் காட்டும் உற்சவம் ஆடி அமாவாசையில் நடக்கிறது.
இவ்விறைவனை வழிபட்டு அகஸ்தியர் தம் குறுகிய வடிவைப் பெற்றார். அகஸ்தியருக்கு இத்தலத்தில் இறைவன் பஞ்சாட்சர உபதேசம் செய்தருளினார்.
இரண்டு படி அரிசியை அம்பாளிடம் கொடுத்து எல்லா கட்டளைகளையும் செய்யுமாறு சிவபெருமான் கூறினார். அதைப் பெற்றுக் கொண்ட அம்பிகை 32 வித தர்மங்களை செய்து முடித்தாராம். இதன் காரணமாக அம்பாளுக்கு அறம் வளர்த்த நாயகி எனப் பெயர் வந்தது.
இவ்வாலயத்தைச் சேர்ந்த 24 அர்ச்சகர்களுள் ஒருவர் காசிக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வர நேரமானதால் மற்ற அர்ச்சகர்கள் அவரது உரிமையை கைப்பற்ற முயன்றனர். அர்ச்சகரின் மனைவி இறைவனை வேண்டி நின்றாள். சிவபெருமானே கிழ அர்ச்சகர் வடிவில் வந்து நித்ய பூஜைகளை செய்து வந்தார். சிறிது காலம் கழித்து காசிக்கு சென்றிருந்த அர்ச்சகர் திரும்பி வந்துவிட்டார். அர்ச்சகர் வடிவில் இருந்த இறைவன், வந்தவரை போலி என வாதித்தார். தீர்ப்பு போலி அந்தணர் பக்கமாயிற்று. முடிவில் சிவபெருமான் தனது வேடம் களைத்து, உண்மை உரைத்து, அனைவர்க்கும் தரிசனம் தந்து மறைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்களுடன் இவ்விறைவனை தரிசிக்க வருகையில், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. கரையைக் கடக்க உதவ வேண்டி பதிகம் பாடிய சுந்தரருக்கு 'ஓலம்' எனக் குரல் கொடுத்து காவிரியை ஒதுங்கச் செய்த பிள்ளையாரே ஓலமிட்ட விநாயகர் ஆவார்.
பெற்றோரை இழந்த அந்தணச் சிறுவன் ஒருவன் க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருக்கையில், ஓர் இரவு அவனது கனவில் தோன்றிய யமன், 5வது நாள் உயிரை எடுக்கப் போவதாக கூறி விடுகிறான். 5ம் நாளன்று சிறுவன் இவ்வாலயம் வந்து ஐயாறப்பனை தஞ்சம் புகுந்தான்.
தெற்கு கோபுர வாசலிலுள்ள ஆட்கொண்டாருக்கு சிறுவனைக் காப்பாற்ற உத்தரவிடுகிறார் இறைவன். யமனை காலடியில் போட்டு மிதித்து, சிறுவனைக் காப்பாற்றுகிறார் ஆட்கொண்டார். கார்த்திகை மாதத்தில் இதை ஐதீகமாகக் கொண்டாடுகின்றனர்.
சித்திரை மாதத்தில் பிரம்மோத்ஸவம் முடிந்ததும் நடைபெறும் சப்த ஸ்தான பல்லக்கு விழா புகழ் பெற்றது. ஏழு ஊர் பல்லக்குகளை ஒரு சேர காணும் பாக்யம் கிட்டுகிறது. ஏழு ஊர் பல்லக்குகளும் திருவையாறு தேரடியில் வந்து சேரும்போது, பொம்மையிலிருந்து பூச்சொறிதல் வைபவம் பார்க்க ஆனந்தமாக இருக்கும்.
நவராத்திரி 9 நாட்களும் காலை மாலை இரு வேளைகளிலும் வேத பாராயணம், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாராயணம் ஆகியன தொடர்ந்து நடத்துகின்றனர்.
மாசி மாத பௌர்ணமி அபிஷேகத்தின்போது நெய்யினால் நனைத்த கம்பளி ஒன்றினால் சிவலிங்கத்தை சுற்றி விடுவர். இதை தரிசிப்பவர்கள் நோய்கள் நீங்கி நலம் பெறுவர் என ஐதீகம்.
பங்குனியில் திருவாதிரை மற்றும் நந்தி அவதார உற்சவம்.
தேவாரத்திருத்தலம் - சக்தி பீடம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.