இத்தலத்தில் பாரிஜாத மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் பாரிஜாதவனம் என்றழைக்கப்பட்டது.
தான் செய்த சிவ அபராதத்திற்கு பிராயச்சித்தம் தேடி இங்கு வந்த பிரம்மதேவர் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார்.
காவிரியின் மணலைக் கொண்டு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி, அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார்.
விருத்திராசரனை வதைத்து பிரம்மஹத்தி தோஷம் கொண்ட தேவேந்திரனும் இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான்.
நாரதரின் கோபத்திற்காளாகி சாபம் பெற்ற ரம்பை இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு வந்தாள். ரம்பையை மீண்டும் அழைத்து வர தனது ஐராவதத்தை அனுப்புகிறான் தேவேந்திரன். ரம்பை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்த ஐராவதம் அவளை பிடித்து இழுத்தது. அவள் பயந்து லிங்கத்தைக் கட்டிக் கொண்டாள். அப்படியும் விடாமல் இழுத்தது யானை. சிவலிங்கம் வளரத் தொடங்கியது. ஐராவதம் மூர்ச்சித்து கீழே விழுந்தது.
இதைக் கேள்வியுற்ற இந்திரன் இத்தலத்திற்கு ஓடோடி வந்து ரம்பையையும், ஐராவதத்தையும் திருப்பி அளிக்க வேண்டினான். இந்திரனுக்கு தரிசனம் தந்த இறைவன் அவன் கோரிய வரங்களையும் அளித்தார். விழித்தெழுந்த ஐராவதம் தன்னை மன்னித்தருள வேண்டி, இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டது.
பிரம்மன் வழிபட்டதால் பிரம்மேச்வரர் என்றும் ஐராவதம் வழிபட்டதால் ஐராவதேச்வரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.
இத்தலத்தில் மரிப்பவர்களின் காதில் சிவபெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்வதாக ஐதீகம். இவ்வூரிலுள்ளவர்கள் அஸ்தியை காவிரியில் கரைப்பதில்லை. பிரம்மகுண்ட குளத்தில் கரைத்தால் மறு பிறவி இல்லை என ஐதீகம் என்பதால் குளத்தில் கரைக்கின்றனர்.
தேவார வைப்புத்தலம்.