துர்வாச மகரிஷி சிவலிங்கத்தை பக்தி சிரத்தையோடு வழிபட்டு ஆராதித்து வந்தார். செண்பக, எருக்க மலர்களால் தொடுத்த மாலையை சிவலிங்கத்திற்கு அணிவித்து பூஜிப்பார். அப்படி பூஜித்த மாலையை கையில் எடுத்துக்கொண்டு செல்கையில், எதிர்ப்பட்ட இந்திரனிடம் அதைத் தந்தார்.
அதை வாங்கிய இந்திரன் அசிரத்தையாக ஐராவதத்தின் (யானையின்) தலையில் வைத்தான். யானையோ தனது துதிக்கையால் எடுத்து கீழே போட்டு காலால் மிதித்தது. இதைப் பார்த்து கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனையும் அவனது ஐராவதத்தையும் சபித்து விடுகிறார்.
துர்வாசரின் சாபத்தால் கருத்த நிற யானையாகிப் போன ஐராவதம், இத்தலத்து சந்திர தீர்த்தத்தில் மூழ்கி, இத்தலத்து இறைவனை அபிஷேகித்து வழிபட்டது. இப்படி தொடர்ந்து 12 ஆண்டுகள் வழிபட்டு தான் கொண்ட சாபத்தைப் போக்கிக் கொண்டது. ஐராவதத்திற்கு அருள் புரிந்த சுவாமி என்பதால், இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
துர்வாசரின் சாபத்தால் ஐஸ்வர்யங்களை இழந்த இந்திரன், இவ்விறைவனை வழிபட்டு பூஜித்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோத்ஸவம் நடத்தி, இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் என வரலாறு கூறுகிறது.
பூகைலாசம், தட்சிண கைலாசம், கதம்பவனம், ஐராவதபுரம், ஆதிசேஷபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. அகஸ்தியர், வாம தேவர், கௌசிகர், விஸ்வாமித்ரர், காளவர், வேதமுனி, கரசர், காலர், வியாசர், குத்ஸர், பரத்வாஜர், ஜாபாலி, சந்திரன், பதஞ்சலி, வியாக்ரபாதர், இந்திரன், ஐராவதம், மருத்துவாசுரன், பிரம்மன், அக்னி, லட்சுமி, ஆதிசேஷன் ஆகியோர் வரங்கள் பெற்ற ஸ்தலம்.
எள்தானம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு பிராம்மணன், பாவங்களை நிறைய சேர்த்துக் கொண்டே போய் பிரம்ம ராட்சஸன் உருவம் பெற்றான். ஒரு நாள் வாம தேவரைப் பிடித்துத் தின்ன முயல, அவர் தரித்திருந்த திருநீறு அவன் மீது பட்டதும் தனது உண்மை நிலை உணர்ந்து, இங்குள்ள வில்வாரண்யத்தில் 12 ஆண்டுகள் தவம் மேற்கொண்டு, 12 சிம்ம பலத்தை தன்னுடைய கரங்களுக்குப் பெற்றான். வாயு மண்டலம் வரை வடிவம் கொண்டு மருத்துவாசுரன் என்ற பெயரைப் பெற்றான்.
அனைவரையும் இம்சித்து வந்த மருத்துவாசுரன், இந்திரனை வெல்லப் புறப்பட்டபோது, சிவபெருமானால் அனுப்பப்பட்ட அகோரமூர்த்தியால் தோல்வி கண்டான். அவனது வேண்டுகோளின்படி, இத்தலத்திற்கு அவனது பெயர் ஏற்பட்டது.
தேவார வைப்புத்தலம் - ஆறு அபிராமி க்ஷேத்திரங்களில் ஒன்று.