தவம் செய்வதற்கு அமைதியான இடம் தேடிய - வசிஷ்டர், கௌதமர், கண்வர் ஆகிய மூன்று மகரிஷிகளும், பிரம்மனின் யோசனைப்படி, தர்ப்பையினால் ஒரு நேமி (சக்கரம்) செய்து, நைமிசாரண்யத்திலிருந்து உருட்டி விட, அந்த நேமி வந்து நின்ற இடம் பஞ்சேஷ்டி, என புராண குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சுகேது எனும் யட்சன் தனது அறியாமையால் சிவநிந்தனை செய்து விடுகிறான். கோபம் கொண்ட ஷண்முகர் அவனை அரக்கனாக மாற சபித்து விடுகிறார். சாப விமோசனம் வேண்டி, அவனது பிள்ளைகள் மூவரும் பராசக்தியிடம் வேண்டி, தேவியிடமிருந்து சக்திகளையும் வரமாக பெற்றனர்.
சுகேதுவும், அவனது மூன்று மகன்களும் அட்டகாசம் செய்யலாயினர். மகிஷாரண்யம் சென்ற சுகேது, அங்குள்ள அசுரர்களிடம் சண்டையிட்டு, பின் இளைப்பாற கடலுக்குள் மறைந்தான். தந்தையை தேடிய பிள்ளைகள் கடலைக் கலக்கி துவம்சம் செய்யலாயினர்.
கடல் வாழ் ஜீவராசிகளைக் காப்பாற்ற வேண்டி, அகஸ்தியர் கடலை குடித்து விட்டார். அரக்கர்கள் அகஸ்தியரின் வயிற்றுக்குள் ஐக்யமாயினர். வருணன் மற்றும் குபேரனின் வேண்டுதலால், மீண்டும் கடல் நீரை உமிழ்ந்ததில், சுகேதுவும் அவனது மகன்களும் வெளியே வந்தனர்.
வெளிவந்த அசுரர்கள் சாப விமோசனம் பெற வேண்டினர். அகஸ்தியரின் யோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து ஐந்து வித யாகங்களை செய்தனர்.
இஷ்டி என்றால் யாகம் எனப் பொருள். தேவயாகம், பிரம்ம யாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுஷயாகம் ஆகிய ஐந்து யாகங்கள், அதாவது பஞ்ச இஷ்டி நடத்தியதால், இவ்ஊருக்கு பஞ்சேஷ்டி எனப் பெயர் வந்தது.
இத்தலத்தில் ஐந்து யாகங்களை செய்து, அந்த யாக விபூதியை பூசிக்கொண்டு, சாப விமோசனம் பெற்றனர் என ஸ்தல வரலாறு.
மித்திரத்துவசன் எனும் மன்னன், தன் நாட்டில் வாழும் மக்கள் மட்டுமின்றி, காட்டில் வாழும் புலி கூட பசியால் வாடக்கூடாது, என எண்ணி ஆட்சி புரிந்த ஸ்தலம். இத்தலத்தில் ஒரு பிடி அன்னமாவது தானமாக தந்தால் புண்யம் கிட்டும், என்று ஐதீகம்.
ஒவ்வொரு பிரதோஷ நாளும் இங்கு திருவிழா போல் கொண்டாடுகின்றனர். சனிப் பிரதோஷமன்று அன்னதானம் செய்கின்றனர்.