திருமண்டங்குடியில் வசித்த ஒரு வைஷ்ணவக் குடும்பத்தில், பூர்வ சிகை வம்சத்தில், வனமாலியின் அம்சமாக அவதரித்து, விப்ரநாராயணன் எனப் பெயர் கொண்டு வளர்ந்து, சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று, பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டு, தான் என்ன செய்ய வேண்டுமென பெருமாளிடமே கேட்டு, குறிப்பைப் பெற்ற வைஷ்ணவர் அவதரித்த ஸ்தலம் இது.
இளமையிலேயே ஸ்ரீரங்கம் சென்று நந்தவனம் ஒன்றை அமைத்து துளசி - பூக்கள் இவற்றைக் கொண்டு திருமாலைக் கட்டி, அரங்கனுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். பெருமாளுக்குத் தொண்டு செய்து வந்ததாலும், எம்பெருமான் ஆணைப்படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ பாததீர்த்தம் சாதிக்கப் பெற்றதாலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் எனும் திருநாமம் கொண்டார்.
இந்த ஆழ்வாரின் விசேஷம் - ஸ்ரீ ரங்கநாதர் ஒருவரே தன் தெய்வம் என்று வேறோர் பதியை நாடாமல் கடைசி வரை வாழ்ந்தவர்.
திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள், திருமாலை - 45 பாசுரங்கள் ஆகிய பிரபந்தப் பாடல்களை மங்களாசாஸனம் செய்தார்.
கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் சமயத்தில் இந்தப் பாடல்களைப் பாடுவார்கள். இவர் பாடிய திருப்பள்ளி எழுச்சிக்கு, பள்ளிக் கொண்டிருந்த எம்பெருமான் திருமண்டங்குடியில் எழுந்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.