மூலவர்: ஆதிகேசவப் பெருமாள், தாயார்: மயூரவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஆதிகேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு சக்கரதாரியாக கம்பீரமாக காட்சி தருவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கின்றது. உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
ஸ்ரீ ராமபிரான், சீதா தேவி, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கணன் ஆகியோரை சேவிக்கலாம். முன் மண்டபத்தில் பேயாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார்.
மயூரவல்லித் தாயார் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சுக்த மஹா ஹோமமும், மாலை வேளையில் ஸ்ரீ சுக்த வில்வார்ச்சனையும் நடத்துகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சேவார்த்திகள் வில்வார்ச்சனை செய்கின்றனர். இரண்டு மணிகளை தாயாரின் திருவடிகளில் வைத்து பூஜித்து கட்டினால் திருமணத்தடை விலகுவதாக நம்பிக்கை.
சக்கரத்தாழ்வார் - நரசிம்மர், ஆண்டாள், வீர ஆஞ்சநேயர் ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். கோசாலை ஒன்றும் உள்ளது.