ஆணவத்தால் செருக்குற்ற காமதேனு பசுவின் கர்வத்தை அடக்கி அருள் புரிந்த ஸ்தலம். காமதேனு ஆகிய பசு இங்கு பெருமாளை வழிபட்டு பேறு பெற்றதால், இவ்வூர் (ஆ - பசு, தன் - ஊர்) ஆதனூர் என அழைக்கப்படுகிறது. ஆதன் எனும் குறுநில மன்னன் இவ்வாலயத்தை நிர்மாணித்ததால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.
ஆதி ரங்கேஸ்வரம், பார்கவ க்ஷேத்ரம் எனப் போற்றப்படும் ஸ்தலம்.
ப்ருகு, அக்னி, காமதேனு ஆகிய மூவருக்கும் அச்சத்திலிருந்து விடுதலை அளித்தார் எம்பெருமான் என்றும், அக்னி சாப விமோசனம் பெற்றார் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அரங்கனுக்கு ஆலய மதில் கட்டியதால், செல்வத்தை எல்லாம் இழந்து விட்டேன் என வருத்தமுற்றான் திருமங்கை மன்னன். அவனது கனவில் தோன்றிய பெருமாள் திரு ஆதனூர் வரும்படி பணித்தார்.
திருஆதனூரில் திருமங்கை மன்னனுக்கு ஒரு வியாபாரி எதிர்பட்டான். அவன் கையில் காலியான மரக்கால் ஒன்று இருந்தது. அந்த மரக்காலை திருமங்கை மன்னனிடம் தந்து, உனது இஷ்ட தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி வழிபட்டுவிட்டு, இந்த மரக்காலில் மண்ணை அளந்தாலும் பொன்னாக மாறும் என்றான் வியாபாரி. ஆனால் கோரிக்கையில் நியாயமான உண்மை இருக்க வேண்டும். இல்லையென்றால் மண் பொன்னாகாது என்றும் கூறினான். அவ்வாறே நடந்தது. இந்த அதிசய வியாபாரி யார் எனத் தெரிந்து கொள்ள முயன்ற போது, மரக்காலுடன் ஸ்வாமி கோவில் கொண்டு சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு. இதனால் ஆண்டளக்கும் அய்யன் என்ற திருநாமத்தைப் பெற்றார்.
சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் எனும் மூன்று காலங்களை அளப்பவரும் நிர்வகிப்பவரும் ஆண்டளக்கும் அய்யனே. தொண்டர்களுக்கு அளித்த கணக்கை எழுதி முடித்துவிட்டு, இன்னும் யாராவது வருகிறார்களா என திரும்பிப் பார்த்த இடம் திரும்பூர். ஓலையில் கணக்கை எழுதிய இடம் ஓலையூர் எனக் கூறுகிறது ஸ்தல புராணம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.