இத்தலத்திலுள்ள பிரம்மாண்டமான அரசமரத்தின் கீழ் அமர்ந்து நீண்ட தவம் செய்து கொண்டிருந்தார் புல்லர் எனும் மகரிஷி. தவத்தினால் மகிழ்ந்த மகாவிஷ்ணு பஞ்சாயுதங்கள் கொண்ட சதுர்புஜங்களுடனும் தேவியர்களுடனும் பிரத்யட்சமானார். புல்லர் மகரிஷி வேண்டிக் கொண்டதற்கிணங்க, அதே கோலத்தில் இங்கு சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். இவரே ஆதி ஜெகந்நாதர்.
இந்த பெருமாளிடமிருந்த அழகிய வில்லைப் பெற வேண்டி ஸ்ரீ ராமர் இவரை பூஜித்து வழிபட்டார். தன் அவதார நாயகனான ராமனுக்கு ஆசி வழங்கும் விதமாக வில்லைக் கொடுத்தருளினார் என ஸ்தல புராணம். இதனால் இவர் பெரிய பெருமாள் எனப்படுகிறார்.
கடலில் அணை கட்டி கடந்து செல்ல தீர்மானித்த ராமர் சமுத்திரராஜனின் அனுமதி பெற வேண்டினார். தர்ப்பைப் புல் படுக்கை ஒன்றினில் சயனித்திருந்தார். அவனை பிரார்த்தித்தார். சமுத்திரராஜன் வருவதில் தாமதம் ஏற்பட்டது. வீர சயனத்திலிருந்து கோபமாக எழுந்து அக்னி அஸ்திரத்தை விட்டு கடலை வற்றச் செய்ய முனையும்போது, ஓடோடி வந்த சமுத்திரராஜன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
சீதையை மீட்ட பிறகு, அயோத்தி திரும்பும் வழியில், ஏற்கனவே கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்ற இத்தலத்தில் இறங்கி பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
தசரதராமா என்னைக் காப்பாற்று என்று விபீஷணன் சரணாகதி அடைந்த ஸ்தலம் என்பதால் பெருமாளிடம் சரணாகதி அடைவோர் இத்தலத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.
தேவலர் எனும் முனிவரால் சபிக்கப்பட்ட ஏழு கன்னியர்களும் ஸ்ரீ ராமரை துதித்து தரிசித்து சாபநிவர்த்தி அடைந்தனர். கண்வ மகரிஷி, காலவ மகரிஷி ஆகியோர் இங்கு தவமிருந்து ஸ்ரீ ராமரை தரிசித்து பெரும் பேறு பெற்றனர்.
இங்குள்ள அரசமரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகள் செய்து, பாயசம் நிவேதனம் செய்து தோஷங்களை போக்கிக் கொள்கின்றனர். சக்கர தீர்த்தத்தில் நீராடுவது புண்யமானது.
மாலி, சுமாலி, மால்யவான் ஆகிய அசுரர்களை வதம் செய்து பின்னர் சக்கரத்திற்கு அபிஷேகம் செய்ததால் சக்கர தீர்த்தம் என்பார்கள். இதில் ஸ்நானம் செய்து அஸ்வத்த மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - சப்தராம க்ஷேத்திரங்களுள் ஒன்று.